அதனை அவன்கண் விடல்
இடி விழுந்து சிதிலமடைந்த தேரின் உச்சத்தை சரி செய்யும் வேலைக்குப் பணிக்கப் பட்டேன். நான் ராமன். எங்கள் ரதம், காளையார் கோவில் ரதத்தையும் விஞ்சும் வண்ணம் உயரமும் அழகும் கொண்டிருக்க வேண்டும் என்பதே பணி. அதற்கு கீழ் தளத்தில் மூன்று அடுக்குகளை பலப்படுத்திய பின் உயரம் கூட்டப்பட வேண்டும்.
இன்னும் ஒரு நிலையை கூட்டினால், தேரின் உயரம் அரண்மனை சாளரத்திற்கும் மேலே வந்து விடும்.
மேற்பார்வையிட ராஜகுரு காளமேகர் வந்தார். "என்னடா இவ்வளவு நாளாக இதே வேலையை செய்து கொண்டிருக்கிறீர்கள்! எப்போது முடியும்? மன்னர் வேறு, வெள்ளோட்டத்துக்கு நாள் குறிக்கச் சொல்லி நெருக்குகிறார். தடி மாடுகள் நன்றாக தின்னத் தெரிகின்றது.
உங்களுக்கு சரியாக இன்னும் இரு வாரங்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள், மேல் அடுக்கினை சிறப்பாக முடித்து, அதற்கு தேவையான சிற்ப வேலைகளையும் அமைத்துக் கொடுக்க வேண்டும். புரிந்ததா?" என்றபடி வெற்றிலை குழம்பை துப்ப பாத்திரம் தேடினார். சித்திரக் குள்ளன் ஒரு வெண்கலப் பாத்திரத்தை தூக்கிய வண்ணம் படியேறினான்.
வெள்ளிப் பூண் போட்ட தடியால் ஒரு அடி. தன் இரு கைகளாலும் பாத்திரத்தை தூக்கி நீட்டிய குள்ளன்,
சற்று முகத்தை குனிந்து கொண்டான். குறி சிறிது தவறினாலும் முகத்தில் விழும் எனும் பட்டறிவால்.
இந்த நிறைமாத ராஜகுருவின் தொந்தி-ரவு சற்று அதிமாக உள்ளதாக உணர்ந்தேன்.
எதாவது செய் என்றது என் மனசு. என்ன செய்ய? மேலிருந்து கையில் இருக்கும் பெரிய உளியை அவன் கழுத்துக்கு குறிவைத்தேன். ஒரு கணம் விரல்களைத் தளர்தினால் போதும், நரகத்தை நோக்கி பயணமாவான். ஆனால் எங்கள் சமூகத்துக்கே, எங்கும் வாழ முடியாத அளவு அவச் சொல் வந்துவிடும்.
பெருந்தச்சனின் தம்பி, என் சிற்றப்பு ஒத்துக் கொண்டு விட்டார். இன்னும் இரண்டு வாரத்தில் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருந்தோம். இரவிலும் தீவட்டி வெளிச்சத்தில் வேலை செய்தால் அன்றி முடிக்க இயலாது.
தென்னை ஓலைகளால் வேயப்பட்ட அவசரக் கூடாரத்தில், உறம் பாய்ந்த கருந்தேக்குகள் முறையாக அறுக்கப் பட்டு இழைக்கக்கப் பட்டுக் கொண்டிருந்தன. கொட்டாப்புளிகளின் அடிச்சத்தமும், உளிகளின் சத்தமும், சிதறும் தேக்குத் துளிகளையும் விடுத்து, வேறு சப்தமேதும் இல்லை. அழகழகான மரச்சிலைகள் தேரில் பதிக்கப்பட காத்திருந்தன.
மெல்லிய குரலில் பாடல் ஒலி கேட்டு நிமிர்ந்தேன். சாளரத்தின் ஓரத்தில் இருந்து வருகிறது. மாலை மயங்கும் நேரம்.
தேரின் உச்சிக்கு விரைந்தேன். சாளரம் மிக அண்மையில். திரைச் சீலை மறைவில் ஒரு அழகிய பெண் உருவம்.
பாடல் முடியும் வரை காத்திருந்து, "அற்புதம்" என்றேன் என்னையறியாமல்.
உங்கள் சிற்பங்களும் அற்புதம் தான்" என்றாள் அவள்.
நாகர்கோவிலில், தேர்வேலைக்கென்றே உருவாக்கப் படுபவர்கள் நாங்கள். எங்கள் கை வண்ணத்தில் அந்த அற்புதத் தேர் மிளிர்ந்தது. அதை மேலிருந்தே பார்த்திருப்பாள் போலும்.
திரைச் சீலையை சற்று ஒயிலாக ஒதுக்கிய அவள் உருவத்தை கூர்ந்து பார்த்தேன். மனிதன் சாயலில் கடவுள்கள் படைக்கபட்டதின் காரணம் விளங்கியது. இவள் ரதி.
"நீ, நீங்கள் யார்?"என்றேன்.
"நான் மணியம்மை, பட்டது இளவரசி.
அந்த ராஜகுரு உங்களை ஏசும்போது மவுனமாக ஏன் இருந்தீர்கள்? "என்றாள்.
கீழே நடந்ததைப் பார்த்திருக்கிறாள்.
"நாங்கள் எதிர்த்துப் பேச தகுதி இல்லாதவர்கள். அவர்கள் குருமார். நாங்கள் நிமிர்ந்து பார்த்தாலே கசையடிகிடைக்கும். உங்களுடன் பேசுவதைக் கண்டால் கொன்றுவிடுவர்".
"கவலை வேண்டாம், இந்நேரம் தென்னந்தோப்பில் உள்ள ஆசைக் கிளத்தி வீடு நோக்கி போய் இருப்பான். மன்னர் அவன் பேச்சில் மயங்கி உள்ளார். அவனால் எப்போது வேண்டுமானாலும் அவர் கொல்லப்படுவார். அவரையும் காக்க வேண்டும். அவனையும் ஒரு வழி செய்ய வேண்டும். எனக்கு உன் உதவி வேண்டும். என்றவள்.....தயக்கமின்றி,
உள்ளே வா" என்றாள்.
இவளது சொல்லுக்கு, உயிரையே கொடுக்கலாம் என்றது என் மனது.
ஒரே தாவு, சாளரத்தின் விளிம்பைப் பிடித்து ஏறி, உள்ளே குதித்தேன்.
"தேர் வேலை முடிந்தபின் சோழி உருட்டப்படும், அதற்குமுன் இதில் ஏதாவது செய்". என்றாள். அவள் கையில் அழகான தந்தப் பேழையில்
அரசருக்கு முன் உருட்டப் படும் சோழிகள், இறந்த பெருந்தச்சனுக்குப் பின் நான் மட்டுமே உருட்ட அனுமதிக்கப் படுபவை.
எனக்குப் புரிந்தது.
இரண்டு வாரங்கள் போனதே தெரிவில்லை. அரக்கு கொண்டு திரிசமன் செய்யப்பட்ட சோழிகள் சொன்னபடி கேட்டன. அவளிடமே திருப்பித் தந்தேன்.
"திருக்குறள் படித்ததுண்டா? என்றாள்.
இல்லை என பொய் சொன்னேன்.
"இதனை இதனான்..." என்று ஏதோ சொன்னாள்... நான் அவள் வாய் அழகையே பார்த்திருந்தேன்.
யானையில் வந்த மன்னருக்கும், சிவிகையில் வந்திறங்கிய மணியம்மைக்கும் பூரணகும்ப மரியாதை செய்விக்கப் பட்டது. நீர் தெளிக்கப் பட்டது. பல வகை வாத்தியக் கருவிகள் இசைக் கப்பட்டன. ஊரே விழாக் கோலம் பூண்டிருந்தது. மக்கள் தேரிழுக்கத் தயாராகியிருந்தனர். கடவுளையும், மன்னரையும் வாழ்தும் கோஷங்களும் விண்ணைப் பிளந்தன.
"சோழிகள் தயாரா?" என்றார் மன்னர் மார்த்தாண்ட பூபதி. சோழிகள் சிவப்புக் கம்பளத்தில் உருட்டப் பட்டன.
நான் அரசர் முகத்தைப் பார்த்தேன்.
எப்படி சுத்திப் போட்டாலும் எட்டு மட்டுமே வந்தது.
அவர் புருவங்கள் என்னை கேள்வி கேட்டன.
"சோழிகள் என்ன சொல்லுதுன்னா?" என்று, வேண்டுமென்றே சற்று தயங்கினேன்.
"சரியாக சொல்லித் தொலையடா!" என்றார் காளமேகர். தனது வெள்ளித் தடியை ஓங்கித் தரையில் இடித்து.
"இனிமேல் எல்லா ஊர்களிலும், அரசருக்கு பதில் தேரில் ராஜாகுருவை மட்டும் ஏற்றினால் போதும், மக்கள் பிரதிநிதியான மன்னர், பிரஜைகளுடன் தேரிழுத்தால் புண்ணியம்" என்கின்றன.
மன்னர் சிறிதும் தயங்காமல் "சரி அப்படியே ஆகட்டும், அமைச்சரே இனி என் சொல்லை சாசனமாக்குங்கள்", என்றார். அமைச்சர் தலையசைத்தார்.
காளமேகருக்கோ ஆனந்தத்தின் உச்சம். அரசர் பீடத்தில், தான் அமர்ந்திருப்பது அவரது நெடுநாள் கனவு.
துந்துபிகளும், முரசங்களும் ஒருசேர ஒலி எழுப்பின. எண்பது அடி உயரத் தேர், அழகாக ஆடியவண்ணம் நகர்ந்தது. கிழக்கு மாடவீதியெங்கும் மக்கள் ஆரவாரம். அதிர் வெட்டுகள் வின்னைப் பிளந்தன. தெற்கு மாட வீடியின் இறக்கத்தில், முட்டுக் கட்டைகள் செருகியும் நிற்காமல் விரைந்தத் தேர், ஒரு பெரிய ஆட்டத்துடன் நின்றது.
ஆனால் அரச பீடம் மட்டும் ராஜகுரு காளமேகருடன்...... அந்தரத்தில் பறந்து வந்து.... அதிவேகத்தில்...... தலை குப்புற தரையில் மோதியது.
மக்களும் மன்னரும் பதறிக் கொண்டிருந்த வேளையில், அரசப் பீடத்தின், நான்கு கால்களில், இரண்டிலிருந்து மட்டும், கச்சிதமாக செதுக்கப் பட்ட இரு விரற்கடைத் துண்டுகள், தங்கள் பணியை செவ்வென செய்திருந்தன.
Comments
Post a Comment