1998 பக்கத்து ஆஃபீஸ் ஆணும், பக்கத்து தெரு பெண்ணும்.
ஜெய் எனும் கிருஷ்ணசாமியின் அடிச்சுவடுகள்.
"உன் மனசுல என்னதான் நெனைச்சின்டு இருக்கே! சொல்லித் தொலைக்கலாமோல்லியோ?" என்றாள் என் அம்மா.
நிமிர்ந்து பார்த்தேன். "இப்போ அப்போன்னு சொல்லி ஏழு வருஷ மாயிடுத்து. இன்னும் எவ்வளவோ பொண்ணுதான் பார்க்கறது?"
எனக்கும் மனதளவில் இனிமேல் பார்க்கும் பெண் final.
ஓகே ஆனால் சரி..இல்லையென்றால் இனி வேண்டாம் என்றுதான் இருந்தேன்.
ஏழு வருஷமா என்றதும், என்னை எல்லோரும் தப்பாக நினைக்க வேண்டாம்.
91ல் எடுக்கப்பட்ட ஜாதகக் கட்டு.
இந்தப் படலமே வேண்டாம் என மேல்படிப்புக்கு அகமதாபாத் போய் விட்டு திரும்பி 3 வருஷம் ஆகியிருந்தது.
ஹிந்து ஆஃபீஸ் வேலையும் விட்டுவிட்டு, இந்தியன் ஆர்டிஸ்ட் கம்பனியில் 2வருடமாக அனிமேஷன் டைரக்டராகியிருந்தேன்.
கம்பெனி எக்மோர் ம்யூசியம் எதிரில்.
தினமும் ஒரு புது பிராஜெக்ட் புதிய அனுபவங்கள், போதாத குறைக்கு பிசினஸ் லைன் நியூஸ் பேப்பரில் எடிட்டோரியல் ஓவியங்களும் தொடர்ச்சியாக வரைந்து கொண்டிருந்தேன்..
சாயுங்காலத்தில் கொஞ்சுவதற்கு... (தப்பாக நினைக்க வேண்டாம்) தங்கையின் குழந்தை.
கூட வேலை செய்யும் பெண் சில நாள் வீடு வரை வந்து ஸ்கூட்டியில் ட்ராப் செய்வாள். "இவள் ஓகே என்றால் சொல்" என்றாள் அம்மா.
கூட வேலை செய்தால்? அந்த இடத்தில் கண்ணியமான நட்புக்கு இடமேயில்லயா? என்னைப் பொறுத்த மட்டில் அவள் ஒரு staff. எந்த ஒரு அநாவசிய எண்ணங்களையும் வளர்த்துக் கொள்ள தயாராக இல்லை. இது அந்தக் கம்பெனியில்
இன்டர்ன் வேலையில் சேர்ந்தபோது எடுத்த முடிவு.
"இங்கேயே பக்கத்து தெருவில் எதாவது பெண்ணைப் பாரும்மா..
கோவிச்சுண்டு போனாலும் கூட்டிவர ஈசியாக இருக்கும்". என்றேன்
பக்கத்து தெருவில் வசித்த பெண்ணை என் தங்கைக்கு தெரிந்திருந்தது.
"ஃபோட்டோ இருந்தால் கொடுக்கச் சொல் இந்த பெண் பார்க்கும் படலம் வேண்டாமே!" என்றேன்.
"போட்டோவெல்லாம் கொடுக்க மாட்டாங்களாம், பக்கத்து தெரு தானே, வேணுமானா வந்து பெண்ணை பார்த்துக்க சொல்றாங்க" என்றாள் என் தங்கை.
சரிதான்.. தேளுக்குத் தேள் சரியா இருக்குன்னு மனசுல "லிண்டா குட் மெனின்" புஸ்தகம் வந்து போனது.
பொங்கல் அன்று பெண் பார்க்கும் படலம் . "மச்சி இதுதான் லாஸ்ட்" இனிமேல் யார் வீட்டுக்கும் இதுக்காகப் போகக் கூடாது " என சங்கல்பம் எடுத்துக் கொண்டேன்.
பெண்ணின் அம்மாவும் பெரியம்மாவும் முதல் ஐஸ்பிரேக்கர் வேலைகளை செய்தனர். "வாம்மா மின்னல் என்றதும்", அனைவருக்கும் சரசரவென காஃபி வழங்கப் பட்டது.
"எங்கப்பா காபி பிரமாதம்! என்றார்.
எதிரே அந்தப் பெண் வந்து அமர்ந்து கொண்டாள்.
"உன் ஆஃபீஸ் எங்கேம்மா? என்றார்.
"பவுண்டைன் பிளாசா. எக்மோர்" என்றாள்.
அட பக்கத்து ஆஃபீஸ்தான்..பார்த்ததே இல்லையே என நினைத்தேன். (கூடவே, கார்த்தாலே ஆஃபீஸ் போனால் நாம எப்போ வெளியே வருவோம்னு நமக்கே தெரியாது, இந்த லட்சணத்தில, பார்த்தது இல்லையாம் ...மனசாட்சி இடித்தது.)
"கம்பெனி பேர் என்னம்மா?" என்றார் அப்பா..
'பியூர் வாட்டர் சிஸ்டம்ஸ் ' ( இன்றைய RO வாட்டர் பில்டர்களின் முன்னோடி) என்றாள் அந்தப் பெண்.
எங்கம்மா கிச்சன் உள்ளே போய்விட்டாள்..
"ஒரு விஷயம் கல்யாணத்துக்கு முன்னாலேயே சொல்லணும்". என்றேன்.
கேள்வியுடன் பார்த்தாள்.
"நீங்க 9-5 ஆஃபீஸ் கோயரை எதிர்பார்த்தீங்கன்னா, நான் அவன் கிடையாது.
திரும்பி வரும் நேரம் பிராஜக்டுக்கு பிராஜெக்ட் மாறும். எனக்கு முதல் பிரையாரிடி வேலைதான் " என்றேன்.
"அது உங்க வேலையோட நேச்சர்.
நான் எதிர்பார்கறது "க்ளீன் ஹாபிட்ஸ் உள்ள ஒரு ஹஸ்பெண்ட்" என்றாள்.
அது நான் தான் என்பது போலத் தலையசைத்தேன்.
இன்றோடு 25 வருஷமாக தலை அசைத்துக் கொண்டிருக்கிறேன்.
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Comments
Post a Comment