ஜெய் எனும் கிருஷ்ணசாமியின் சின்ன சின்ன சுவடுகள்.
1988
ரிடையர்மென்ட்
**********************
ஒருநாள் மதியம்...
"இங்கே யாரு சார் சூப்பர்வைசர்? கோவத்துடன் நண்பன், எச்சில் கையுடன் சமையல் அறையில் நுழைந்தான். என் நண்பன் பாலு. பின்னாலேயே தட்டுடன் நானும்.
ஒரு பெரியவர் ஓடி வந்தார். "ஏன் சார், என்ன ஆச்சு?" என்று கேட்டபடி.
"இவரு புதுசா சேர்ந்த ஆர்டிஸ்ட். இவருக்கு போட்ட தயிர் சாதத்துல எவ்வளவு பெரிய குண்டூசி கிடக்குது பாருங்க!" என்றான்.
"நீட்டுயா உன்னோட தட்டை" என்றான் பாலு.
நீட்டினேன்.
ஒண்ணரை இஞ்ச் நீளம். ஸ்டீல் குண்டூசி.
பெரியவர் ஆடிப் போய் விட்டார்.
கிடு கிடு வென கூட்டம் சேர ஆரம்பித்தது. சமையலறையில் கூட்டம் அதிகமாகவே அனைவரும் வெளியில் வந்தோம்.
அதற்குள் யாரோ ஒருவர், " ஏம்பா யாராவது தலைவருக்கு சொல்லிட்டீங்களா?"
"தலைவர் ஊர்ல இல்லிங்க சார்! சங்கத்துல நீங்க மெம்பராகிட்டீங்களா?" என்றார் மற்றவர்.
நாங்கள் வேலைக்கு சேர்ந்தே நாலு மாசம் கூட ஆகவில்லை.
" தப்பு நடந்து போச்சு, நீங்க தான் மன்னிக்கணும், பெரியவர் மன்னிப்பு கேட்டார். பாலுவைப் பார்த்து.
"நான் அதை உபயோகிப்பதே இல்லை. எப்படி வந்ததுன்னு தெரியலை" என்றார்.
" அதைத் தாங்க நாங்களும் கேட்கறோம்? குரலை உயர்தினான் பாலு.
கணிசமாக சேர்ந்த கும்பலில் ஒருவன், "இவங்களை, ஊரை விட்டே துரத்தணும், நாட்டை விட்டே துரத்தணும்!"
என பெரிய லெவலில் பேச ஆரம்பித்து விட்டான்.
"பாலு, மேட்டரை இதோடு விடலாம், பசிக்குது" என்றேன்.
அதெப்படிய்யா விடறது? தொண்டையில மாட்டி உயிர் போயிருந்தால்? என்றான் பாலு.
"இருங்க தம்பி, தலைவர் ரெண்டு நாள்ல திரும்பி வந்துடுவாரு, வந்ததும் வச்சிக்கலாம்" என்றது கூட்டதில் ஒரு குரல்.
தட்டோடு ரெண்டு நாள் பட்டினியாகவா? மனசு கோணல் மாணலாகக் கேள்வி எழுப்பியது.
பெரியவர் "இந்தக் கம்பெனியில் நாற்பது வருஷமா வேலை செய்கிறேன், ஒரு தப்பு நடந்தது இல்லை.
ரிடையர் ஆக ஒரு வாரம் முன்னல தானா இப்படி ஆகணம்? என்று கையைக் கூப்பினார்.
பெரியவர் கடுமையாக பாதிக்கப் படுவார் என்பது தெளிவாக உறைத்தது.
பக்கத்திலிருந்த பெரிய குப்பைத்தொட்டியில் குண்டூசியுடன் சாதத்தைக் கொட்டினேன்.
தட்டை பக்கத்திலிருந்த மேடையில் வைத்தேன்.
கூட்டம் ஆச்சரியமாகப் பார்க்கும் போதே, அங்கிருந்து விடுவிடுவென நடையைக் கட்டினேன்.
முக்கு திரும்பும் போது கவனித்ததில், பெரியவர் என் திசையில் கூப்பிய கைகளை இறக்கவில்லை.
பாலுவும், கூட்டமும் கலைந்திருந்தனர். கிடைத்த அவலும் போய்விட்டதால்.
காதி கிராமோத்யோக் பவன் மாடியில் சுடுசோறு கிடைக்கும் என, ப்ராசஸில் வேலை செய்யும் மனோகரன் சொல்லி இருந்தான்.
Comments
Post a Comment