பவானி கிஸ்மி.

எங்கம்மா வாசல்திண்ணையில் உட்கார்ந்துண்டு, எதிர்வீடில் புதுசா குடிவந்த மாமியோட பேசிக் கொண்டிருந்தாள்.
நான் பஞ்சபாத்ரத்தை உள்ளே வைக்கப் போகும் போது என்னைப் பற்றி கதை ஓட ஆரம்பித்தது. இவன் இப்பதான் பொம்மை காலெஜ்ல படம் போடக் கத்துண்டு , மூணு வருஷமா ஹிண்டு பேப்பர் ஆஃபீஸ்ல வேலைக்கு போய்ண்டிருக்கான். கல்யாணத்துக்குப் பார்திண்டிருக்கோம் ஒண்ணும் தெகயலை...

எனக்கு ரூமில செம்ம கோவம்.... வறவா போறவா கிட்டயெல்லாம் இப்படி சொந்தக் கதையெலாம் சொல்லதேன்னு பலதடவை சொல்லிட்டேன்.
சட்டென சட்டைய மாட்டிண்டு வெளியக் கிளம்பினேன். "அம்மா, கோயிலுக்கு போய்ட்டு வர்ரேன்"... அம்மா என்னை ஏற இறங்கப் பார்த்தாள்.
எதிராத்து மாமி..."எங்க பவானியயும் கூட்டிண்டு போய்ட்டு வரையாப்பா?" என்றாள்.
"குழந்தையைக் கூப்பிடுங்கோ! எல்லாம் அழைச்சுண்டு போவான்" இது எங்கம்மா.
பெருசாளிய கல்லால் அடிச்சாற் போல மாமி வீரிட்டாள்... "டீ பவானீ"....
அன்பு கடைய தாண்டும் போது லைட்டா திரும்பிப் பார்த்தேன். நல்லவேளை... பயலைக் காணோம்..பார்த்து விட்டால் செம்மையா ஓட்டுவான். அவன் மனைவி தான் இருந்தாள்.
விரைப்பாக அதுவரை நடந்து கொண்டிருந்த நான்... மெதுவாக பேச்சு கொடுத்தேன். "நீங்க எந்த ஊர்லெருந்து இங்கே மாத்திண்டு வந்திருக்கேள்?"
"நாம பொறந்த ஊரு... மங்களூரு...படிச்சதெல்லாம் தும்கூரு.... அம்மாதான், டமிள் சொல்லிக் கொடுத்தாள். என் பேரு பவானி உங்க பேரு?" குரல் தேனாக இனித்தது.
"க்ருஷ்ணஸ்வாமி"
முதல்தடவை ஒழுங்காக திரும்பி அவளை பார்தேன்.. ரூபென்ஸ் வரைஞ்சார்ப்போல தந்தக் கலரில் இருந்தாள். உதடுகள் ரோஜா நிறம்..கண்களும் மூக்கும் கோபுலு வரைஞ்சாப்போல...
ஒரு கணம் " மாதவா! சூப்பர்டா"வென! ஜனகராஜ் சம்பந்தமில்லாமல் மனதுக்குள் வந்து மறைந்தார்.
"நாங்க இதே ஊர்ல 1969லேர்ந்து இருக்கோம்" என சொன்னபோது கோவிலை நெருங்கியிருந்தோம்.
"நீங்க ரொம்ப யோசிச்சு யோசிச்சுதான் பேஷுவேளா"? என்றாள்.
" இல்லையில்லை... அப்படியெல்லம் ஒண்ணும் இல்லை..என் மனசுல ஒண்ணு ஒடிண்டிருக்கு... அப்பறமா கேக்கறேன்", என்றேன்.
கேள்வியுடன் அவள் என்னைப் பார்த்த போது.. கோவில் முருகர் ஸந்நிதி வந்திருந்தோம்.
மோதிர விரலால் சின்னதாக ஒரு கீற்று போல இட்டுக் கொண்டாள். அதற்கு மேலிருந்த ஸ்டிக்கர் பொட்டில் சிறிதும் படவில்லை. நான் ஆச்சரியமாக அவளைப் பார்தேன்.
என் பின்னாலேயே வா என்றேன். முருகர் ஸன்னதி பின்னால் ஒரு சின்ன இருட்டு சந்து..
தயங்கி தயங்கி என் பின்னாலேயே வந்தாள்.
இப்ப கேக்கலாமா, அப்பறமா என யோசித்து பின்...
"நாங்கள் ஐஸ்பாய்ஸ் ஆடும்போது, இந்த சந்து வழியாக சரசரவென கோவில் மேலே ஏறிடுவோம்... அண்ணா வீதி பசங்களால் எங்களைப் பிடிக்கவே முடியாது என பழைய கதையை சொன்ன போது எனக்கு பெருமை பிடிபடவில்லை... பழைய நினைவுகள் வந்து போயின. ஆடினது "டியாண்டோல்" இவளுக்கு புறியட்டுமேன்னு கொஞ்சம் மாற்றி சொல்லி வைத்தேன்.

கோவில் ரொம்ப வருஷப் பழமை வாய்ந்தது..ஓவியர் சில்பி கூட வரைஞ்ஜிருக்கார்..எனக்கு வாட்டர் கலர் வர்க்ஸும், இண்டியன் இங்க் வர்க்சும், நல்லா வரும்.. ஆனால் இப்ப நான் வேலை செய்யறதெல்லம் டிஜிட்டலாதான்.. என்றேன்...

மறுபடியும் கேள்விக்குறியோடு என்னைப் பார்த்தாள்... என் மனதுக்குள் இதுவரை என்னை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தவள்.. ஒரு ஸெகண்டில் ரிவர்ஸில் ஒடுவது போல ஒரு காட்சி வந்து போனது.

மருந்தீஸ்வரர் தரிசனம் முடிந்து பிரகாரத்தை சுற்றி வரும்போது "சண்டிகேஸ்வரரை தாண்டியதும் ஒரு மரப் பலகை வரும்.. அதில் ஒங்கி மிதித்தால் ஒரு பெரிய ட்ரம் அடித்த சத்தம் வரும்" என்றேன்.
சத்தம் வந்தது.

ஒரு வினாடி அதிந்தாள்.
கால பைரவரை கடக்கும் போது சட்டென்று என் தோளைப் பிடித்துக் கொண்டு "BAT" என்றாள். மண்டைக்குள் ஏகப்பட்ட கிறுகிறுப்பு.. அடங்க எனக்கு முப்பது வினாடியாச்சு..

"அது வௌவ்வாலோட ஒரு வகை..துரிஞ்சல்ன்னு சொல்லுவோம்!" என்றேன். "for me everything is BAT only" என்றாள். இன்னொரு துரிஞ்சல் வராதாவென மனசு ஊளையிட்டது.
அம்மன் ஸன்னதி பார்த்துவிட்டு சிறிது நேரம் உட்கார்ந்தோம்.
"நீங்க எதோ கேக்கணும்னு சொன்னீங்களே!" என நினைவாகப் படுத்தினாள்.
ஒரு நிமிடம் தயங்கிய பின்,
" 'க்ருஷ்ணஸ்வாமி'ன்னு சைன் பண்ணலாமா?...இல்லை சுருக்கமா 'கிஸ்மி'ன்னு சைன் பண்ணலாமா"ன்னு ஒரு தாட் மண்டைல ஒடித்து... அதான் உங்களைக் கேக்க நினைத்தேன்.
"அது உங்க இஷ்டம், நம்ம டெஸிஷன் நாமதான் எடுக்கணும். உங்க அளவுக்கு டீப்பா ஆர்ட் பற்றி பேச எனக்குத்தெரியாது. எனக்கு படம் போடுவது துளியும் வராது.. கணக்குலயும், சயன்ஸ்லயும் நான்தான் டாப்பர். பிட்ஸ் பிலானில எம் எஸ் முடிச்சுட்டு இப்ப கோக்னிஸென்ட்டுல பேங்கிங்க் ஸெக்யூரிடீஸ் அனாலிஸ்டா இருக்கேன் ஆனால் படிச்சதுக்கும் செய்யற வேலைக்கும் சம்பந்தமேயில்லை. என்னோட ப்ளான்.. எப்படியாவது கானடா போயிடணும்.மினிமம் 3 லாக்ஸ் பர் மந்த் சேலரி கிடைக்கும்.. இங்கே எங்கம்மா தொல்லை தாங்கலை" என்றாள்.
என்னுள் ஏதோ பொறி தட்டியது.
கொஞ்ச நாளில், எதிர் வீட்டுக்கு புது மாமி குடி வந்திருந்தாள்..
எங்கம்மா வழக்கம் போல என் பேரு ஸ்யாமளா, உங்க பேரு என்ன? என்று கேட்டுக் கொண்டிருந்தாள். என் பையன் ஹிண்டு ஆஃபீஸ்ல....என்று சொல்லும் போது...

நான் அஹமதாபாது தேசிய டிசைன் இன்ஸ்டிட்யூட்டுக்கு ரெடி செய்த விண்ணப்பத்தை போஸ்ட் பண்ண கிளம்பினேன். கண் மறைவாய் 3 வருஷம். அனிமேஷன் டிசைன் என்னை வா..வா என்றது.

Comments