ஜெய் எனும் கிருஷ்ணசாமியின் சின்னச் சின்ன அடிச்சுவடுகள்.

1998
"சைகோ"
************
அடையாரிலிருந்து, கோட்டூர்புரம் போகும் பிரதான வழி அகலமாக இருக்கும். அதில் வீராணம் குழாய் போன்ற பெரிய குழாய்களைப் பதிக்க, ஆழமான பள்ளம் வெட்டி அவசரமாக பதித்து மூடியும் இருந்தனர். ரோடு பல இடங்களில் முறையாக போடப் படவில்லை. அங்கங்கே தூக்கிக் கொண்டு பூகம்பம் வந்தார்ப் போல, மிகவும் அபாயகரமான நிலைமையில் இருந்தது.
7.00 மணிக்கு ஆனந்த் தியேட்டரில் "சைகோ" திரைப்படம் பார்க்க, சுசூகி பைக்கில் விரைந்து கொண்டிருந்தேன். இந்த ரோடு எனது வேகத்தை கணிசமாகக் குறைத்திருந்தது.
சென்னை மாநகரத்தில், பைக்குகளை மாற்றி வடிவமைக்கும் கலாச்சாரமும், டெக்னோ சைரன் வகையான பயங்காட்டும் பைக் ஹாரன்களும் அறிமுகமாகி இருந்தன. இவை நம் பக்கத்தில் ஒலிக்கப் படும்போது நம்மை செயலிழக்க செய்துவிடும்.
எனது வண்டியை ஒரு பங்க் (punk) மண்டையனும் அவனது வெள்ளை கேர்ள் பிரண்டும் , அவனைபோலவே இருந்த ஒல்லிகுச்சான் பைக்கில் கடந்து விரைந்தனர். எக்சிபிஷனில் அபாயகிணற்றில் ஓடும் பைக்கின் சத்தம் வரப் பண்ணி இருந்தான்.
பாம்பு போல வளைந்து வளைந்து ஓட்டியவன், குழந்தையின் வீரிடும் அழுகையை ஹாரானாக வைத்திருந்தான்.
"ஆஹா! இந்தவேகம் இந்த ரோட்டுக்கு பொருந்தாது"என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.
அதற்குள் அவர்கள் 500 மீட்டர்களை 60கிலோமீட்டர் வேகத்தில் தாண்டியிருந்தனர்.
இன்னைக்கு இவனுக்கு க்கிளைமாக்ஸ் சீன் தான் என நினைக்கும் முன், டமால்! எனும் ஓசையுடன், எதிரே வந்த ஆட்டோவையும் கவிழ்த்து தானும் கவிழ்ந்திருந்தான்.
இருட்ட இன்னும் கொஞ்ச நேரம் பாக்கி இருந்தது. ஆட்டோவில் இருந்த டிரைவர் சைடு வழியே இடித்தவனின் அம்மாவை அசிங்கமாக திட்டியபடி வெளியேறிக் கொண்டிருந்தார்.
அந்தப் பிசாசு மண்டையன் ஒரு ஓரமாகக் கிடந்தான். என் வண்டியை நிறுத்திவிட்டு ஓடினேன். மனசுக்குள் சைகோவா? விபத்தா? எது முக்கியம் என்னும் கேள்விகளுக்கு மனக் கோர்ட்டில், இவர்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போவதுதான் முக்கியம் என தீர்ப்பாகியது. எதிர் பக்கத்தில் ஆட்டோக்காரர் சிலர் உதவியுடன் வண்டியை நேராக்க முயற்சித்து கொண்டிருந்தார்.
நான் அவளை நெருங்கினேன். ரோஸ் நிற மிடி அணிந்திருந்தாள். வலி தாங்காமல் அனத்திக் கொண்டிருந்தவளிடம்,
"சிஸ்டர், நீங்கள் நடுரோட்டில் கிடக்கிறீர்கள், உங்களைத் தூக்க அனுமதி உண்டா? என ஆங்கிலத்தில் கேட்டேன்.
"அவன் எங்கே? அவனைத் தூக்க சொல்லுங்கள்" என்றாள் தமிழில்.
"அவன் உங்களைத் தூக்கும் நிலையில் இல்லை. முதலில் உங்களை பிளாட்பாரத்தில் அமர்திவிட்டு அவனை கவனிக்கிறேன்" என்றேன். அவள் அடம் பிடித்தாள்.
"ஷட்டப், அண்ட் கோ-ஆப்பரேட் வித் மீ என்றவன், அவளை கொத்தாக தூக்கி , கோணல் ரோடின் பிளவுகளைத் தாண்டி நடைபாதையில் இருத்தினேன். இரத்தம் கால்களில் இருந்து கசிந்து கொண்டிருந்தது. அதை நிறுத்த என் கைக்குட்டையால் அவசரக் கட்டு போட்டேன். நனைத்து சிவப்பானது. Phone நம்பர் கொடுங்கள் வீட்டுக்கு சொல்கிறேன் என்றேன். அவள் சொல்லும் நிலையில் இல்லை, இல்லையேல் சொல்ல விரும்பவில்லை.
எனக்குள் கோட்டூர்புரம் தாண்டி செனடாப் ரோடு முக்கில் இருக்கும் ஆஸ்பத்திரி நினைவுக்கு வந்தது.
வழக்கம் போல அவசரத்துக்கு ஒருவரும் காரை நிறுத்தாமல் விரைந்து கொண்டிருந்தனர் ஒருவரைத் தவிர.
அவர் ஶ்ரீதர், சன் டிவியின் செய்தி வாசிப்பாளர். "சார் நான் ஹிந்து பேப்பர்ல வேலை செய்யறேன், இவங்க ரெண்டு பேரையும் எப்படியாவது ரோடு முனையில் இருக்கும் ஆஸ்பத்திரியில் விட்டுடுங்க, நான் பின்னாலயே வர்றேன்" என்றேன்.
அவளது ஒருகால் முறிந்திருந்தது, அவளலரியதிலிருந்து தெரிந்தது.. "ஈஸி ஈஸி", உனக்கு ஒண்ணுமில்லை!!! என சொல்லியபடியே பின்னாலிருந்த சீட்டில் கிடத்தினேன்.
அந்தக் கரப்பான்பூச்சி மண்டையன் வெளிறி இருந்தான். பணக்கார வீட்டு பெண் இவனை நம்பி வண்டியில் ஏறி முட்டி உடைந்ததோடு தப்பி இருக்கிறாள். ஶ்ரீதர் சாருடைய கார், எனக்கு முன்னால் சென்று மறைந்தது.
ஆஸ்பத்திரி வாசலில், ஶ்ரீதர் சாரை தேடினேன், அவர் செய்தி வாசிக்க பறந்து விட்டார்.
"நீங்கள் இந்தப் பெண்ணுக்கு என்ன வேண்டும்? "என்றாள் நர்ஸ்.
"நான் அவளுக்கு எந்த உறவுமில்லை,
இது என் விசிட்டிங் கார்ட், அவள் நினைவு திரும்பினதும் அவள் வீட்டு போன் நம்பர் கேட்டுக் கொள்ளுங்கள்" என்றவனிடம், இங்கே கையெழுத்து போடுங்கள் என்றாள். போட்டேன்.
அவளது ஸ்டிரேட்செர் ஆபரேஷன் தியேட்டருக்குள் விரைந்தது.
இனி நான் இங்கே செய்ய ஒன்றுமில்லை.
"நான் மறுபடியும், மூன்று மணி நேரம் கழித்து திரும்பி வருகிறேன் ஒரு அவசர வேலை, என்று டியூட்டி டாக்டரிடம் கூறிவிட்டு தியேட்டர் நோக்கி விரைந்தேன்.
புதிய சைகோ படம் த்ராபையாக இருந்தது. பழசு பெட்டர் என்று நினைத்தபடி வண்டியை ஆஸ்பத்திரிக்கு திருப்பினேன்.
அவளின் அப்பா ஆஸ்பத்திரி வாசலில், நின்றிருந்தார். "நீங்க தான் அட்மிட் செஞ்சீங்களா தம்பி? என்றார்.
"ஆமாம் சார்,என்னைத் தாண்டி தான் பைக்குல வேகமாகப் போனாங்க..சடனா ஆட்டோ மேல மோதி இப்படி ஆகிடுச்சு" என்றேன்.
"எதாவது செலவாகியிருந்தா?.... எனும் பீடிகையுடன் பர்ஸை தேடியவரின் கையை அமர்த்தி, "நியூஸ் ரீடர், ஶ்ரீதர் சார் டைம்லி ஹெல்ப் செஞ்சார். இல்லைன்னா கஷ்டமாப் போயிருக்கும்..நீங்க அவரைத்தான் தேன்க்" பண்ணனும் என்று சொல்லியவன், அவங்களைப் பாக்கலாமா? என கேட்டேன்.
பச்சை நிற ஸ்கிரீன் நகற்றி காண்பித்தார். காலில் பெரிய மாவுக் கட்டு போட்டிருந்தது. பச்சை நிறப் போர்வை போர்தியிருந்தது. மயங்கிக் கிடந்தாள்.
8 ஸ்டிச் போட்டிருக்காங்க தம்பி, போன் செட்டாக நாளாகுமாம்" என்றவரிடம் கை குலுக்கி அகன்றேன்.
ஆஸ்பத்திரியில் அந்தப் பிஞ்ச மண்டை punk சைகோவையும், கோட்டூர்புரம் ரோடில் அவனது கோணல் பைக்கையும் காணவில்லை.


Comments