புன்முறுவல்
"இரத்தம் ஒரே நிறம்" குமுதத்தில் வந்தபோது, சுஜாதா சாருடன், ஓவியர் ம.செ. எனும் மணியம் செல்வன் இணைகிறார். ஆலப்பாக்கம் முத்துக்குமரனும் , மக்கிசின்சியும், பூவும், தாண்டவராயனும், எமிலியும், 4 வண்ண ஹாப்செட் கலரில் எங்களை அலைக்கழித்தனர். சூப்பர் வேகத்தில் ஆரம்பித்த வரலாற்று நவீனம்.
ம.செ.,சுஜாதா சார் கனெக்சன் தொடர்ந்து கொண்டேயிருந்தது இந்தக் கதை பாரதிராஜா சாரால் படமாக்கப் படும் வரை.
ம.செ அவர்கள் இந்தப் படத்தின் கலை இயக்குநரானார்.
இதற்கு நடுவே, திரு.ம. செ அவர்களால் எனது கலைத் துறை வாழ்க்கை நெறிப்படுத்தப் பட்டு, ஓவியக் கல்லூரியில் சேர்ந்து, ஓவியனாகியிருந்தேன்.
சிலிக்கான் சில்லுப் புரட்சியும், என் இனிய இயந்திராவும் வரி வடிவில் எங்கள் வாழ்க்கைக்குள் நுழைந்து இருந்தனர்.
கம்ப்யூட்டர் அறிவு இல்லாவிட்டால் எதிர்காலம் இருண்டுவிடும் எனும் சுஜாதா சாரின், வரிகளின் தாக்கம் என்னை கம்ப்யூட்டர் பயில வைத்தது.
சம்பளம் 400. கம்ப்யூட்டர் கிளாஸ் ரேட் 500. "ஆட்டோ காட்" மென்பொருள் படிப்பு, 1986ல் சென்னைக்குள் அடி எடுத்து வைத்திருந்தது.
வரை கலைக்கு மவுஸ் பயன்படுத்தாத காலம், அரை நாள் புரோகிராம் டைப்பினால் , இரயில்வே டிக்கெட் கொடுக்கும் பிரிண்டர் போல ஒரு மெஷினில், ஒரு பிரின்டவுட், முப்பது நிமிஷம் கழித்து, முக்கிமுனகி வெளியே வரும்.
பதினைந்து வருடங்கள் உருண்டிருந்தன. இந்தியன் படத்துக்கு சுஜாதா சார் எழுதிய கதைக்கு நான் ஸ்பெஷல் இப்பெக்ட் செய்வேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை.
சிலிக்கான் கிராஃபிக்ஸ் கம்ப்யூட்டரில், அனிமோ மென்பொருள் கொண்டு கமல்ஹாசனை அனிமேஷன் செய்தோம்.
ஓவியர் ம.செ மகள் கல்யாணத்துக்கு திரு சுஜாதா அவர்கள் மனைவியுடன் வந்திருந்தார்.
என் மனைவியுடன் எதிர் ரோவில் சாப்பிட்டு கொண்டிருந்தோம்.
நான் சாப்பிடவேயில்லை, அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
"ஜெய், அவரு கிட்டே போய், அவர் கதையின் ஹீரோக்கள் பெயரைத்தான், நம் ரெட்டை பிள்ளைகளுக்கு வச்சிருக்கோம்"னு சொல்லுங்களேன்" என்றாள்..
நான் அவளைப்பார்த்து, "அதெல்லாம் அவருக்குப் பிடிக்காது, அவரு எவ்வளோ பெரிய ரைட்டர்! அவருகிட்ட போய் இவன் சிபி, அவன் ரிஷி என அசடு வழிய சொன்னால், "சோ வாட்?"டுன்னு சொல்லிட்டா பங்கமாகிடும் என்றேன்.
"அதெல்லாம் சொல்ல மாட்டார், அந்த மாமி கிட்டேயாவது நைசாப் போயி சொல்லுங்களேன்" என்றாள் கிராதகி.
அதற்குள் தம்பதியினர், கை அலம்பிக் கொண்டு திரும்பியிருந்தனர்.
மாமி குழந்தைகளை கொஞ்சினாள்.
பேரு என்னம்மா? என்றாள்.
என் மனைவி ஜெயஶ்ரீ,
"இவன் ரிஷி, ரோஜா ஹீரோ, அவன் சிபி, என் இனிய இயந்திரா ஹீரோ" என்றாள்.
அவர் புன்முறுவல் செய்தார்.

Comments
Post a Comment