தெய்வம் அமர்ந்தும் . . .

பரசுராமன் செய்யும் இரும்புப் பட்டறைத் தொழிலில் கிடைக்கும் காசைச் சேர்த்து, கஷ்டப் பட்டு வாங்கிய நிலம்.

சங்கிலிப் பிடித்து அளந்து, பட்டா போடப் போன இடத்தில், பரசுராமனிடம் லஞ்சம் கேட்டது அதிகார வர்க்கம்.
அவனால் உடனே புரட்டித் தர முடியாத ஒரு தொகை.
"அண்ணா! இரண்டு நாள் முன்னால பட்டா வாங்கப்போன இடத்துல, ஆபீசரு நிறையப் பணம் கேக்குறாருண்ணா, என்ன செய்யுறதுன்னுனே தெரியலை. படப்பைல இருக்குற மாமியாரு, என் புள்ளைக்குப் போட்ட அரணாக் கொடியக் கூட அடமானம் வச்சுட்டேன். நான் தெனிக்கும் வேலை செஞ்சாதான் பொழப்பு நடக்கும்.. ஆபீசரு இப்ப வா, அப்ப வான்னு, அலைய உட்டுகினேகுறாரு! " என்றான்.
" கட்ச்சியா 10,000 ரூபா கொண்டாந்தீன்னா பட்டா. இல்லீன்ன்னா இல்லீன்னுட்டாரு" என்றான் கைகளைப் பிசைந்தபடி.
"வண்டில உக்காரு' என்று கூறி அவனை அழைத்துக் கொண்டு கிராம நிர்வாக அலுவரைப் பார்த்துப் பேச புறப்பட்டேன்.
பாண்டியன் என்னும் அந்த VAO, கொஞ்சங்கூட அசைந்து கொடுக்கவில்லை!
எங்கள் கிராமத்துக்கும், சுத்துபட்ட பத்துக் கிராமங்களுக்கும், பாண்டியன்தான் பொறுப்பு என்பதால் அவனைத் தான் நாங்கள் அணுகியாக வேண்டும். வேறு வழியில்லை.
" சார், அவன் வாங்கி இருக்குற நிலம், விவசாய நிலமா? நத்தம் புறம்போக்கா? சர்வே நம்பர் சரியா இருக்கா? வில்லங்கம் ஏதும் இருக்கா? இதெல்லாம் பார்க்க வேண்டாமா? நான் தலையாரி முதல் கொண்டு எத்தினி பேருக்கு குடுக்கணும் தெரியுமா? என்னமோ இவன் ஒருத்தன் நிலத்துக்கு, "பட்டா ஸ்கெட்ச்" போடத்தான் நான் இருக்குற மாதிரி..
10,000 கொணாந்தா பட்டா! இல்லீன்னா உன்னால ஆவுறத பாத்துக்கோ! இதான் உனக்கு பைனல்!" என்றான் தெனாவட்டாக!
எனக்கு ஆத்திரம் பொறுக்க முடியவில்லை. நாம் நேரிடையாகப் பேசிப் பார்த்தால் கொஞ்சம் இறங்கி வருவார் என்று எதிர்பார்த்து வந்த நான், ஏமாற்றமும் கொதிப்பும் அடைந்தேன்.
பாவப்பட்ட பரசுராமனுக்கு நியாயம் கிடைத்தேயாக வேண்டும். ஏதாவது செய்ய வேண்டும்! இப்படியே விட்டு விடக்கூடாது!
எனக்குத் தெரிந்த போலீஸ் நண்பரை அணுகினேன்... "ஏதாவது செய்யணும் ஜான்" என்றேன்.
அவர் மூலமாக பாண்டியன் என்கிற நரியைப் பொறியில் சிக்க வைக்க வியூகம் வகுக்கப்பட்டது.
"....த்தா அய்யிர! மாட்டிய்யா உடுறே! இந்தக் கழிசடை பரசுராமன், எப்புடி பட்டா வாங்கிடரான்னு நானும் பாக்குரேன்!"
சபதமிட்டபடி லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஜீப்பில் ஏறிக்கொண்டே கருவினான் பாண்டியன்.
எங்கள் இருவருடைய பரம்பரையையும், தூற்றித் தள்ளினான். வசவுகளின் உக்கிரத்தை தாங்க முடியாமல் கூசிய பரசுராமன், காதைப் பொத்திக் கொண்டான்!
"...த்தா! இன்னும் ஒரு வாரத்தில் வேளியே வர்ரேனா? இல்லியான்னு பார்த்துக்கோ! .. அய்யிரே உன் சாவு என் கைய்யாலதான்!" என்று சவால் விட்டான்!
வாலறுந்த பல்லி!
துடிக்கிறது!
ஜீப் நகர்ந்தது.
"அண்ணா மனசே சரியில்லை. கோயிலுக்குப் போயிட்டு, வூட்டுக்கு அப்புறமா போலாமாண்ணா?" என்றான் பரசுராமன்.
"சரி வா" என்றபடி வண்டியை சிங்கப் பெருமாள் கோவில் நரசிம்ஹசாமி கோவிலுக்கு போகும் வழியில் திருப்பினேன். துளசி மாலை வாங்கி, அர்ச்சனைச் சீட்டு பெற்று, கடவுளை கண்ணை மூடி தியானிக்கும் பரசுராமனையேப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
உக்கிர நரஸிம்ஹர் அபயம் கொடுப்பது போல அமர்ந்திருந்தார்.
இவனுக்கான நல்லதை, அவன் செய்வான் எனும் நம்பிக்கையுடன் அவரவர்வீடு திரும்பினோம்.
வீட்டுக்கு வந்ததும் ஆன்லைனில் அவனது விபரம் முழுவதும் சென்னை மாநகராட்சி இணையத்தில் தேடியதில் அவனது நிலப் பிரிவு செங்கைக் கோட்டதில் இல்லாமல், கூடுவாஞ்சேரி கோட்டதில் இருப்பது தெரிந்தது. அதிலேயே அவனது பட்டாவும் இருப்பது தெரிந்ததும், அதைத் தரவிறக்கம் செய்து 'பென்' டிரைவில் ஏற்றி கொண்டேன். எல்லாப் பேப்பர்களையும், ப்ரிண்ட் போட்டு, இரண்டு ஜெராக்ஸ் எடுத்து, ஒரு கவரில் போட்டு அவனிடம் கொடுத்தேன்.
"பரசுராமா, நிலம் உன் பெயரில்தான் இருக்கு! பட்டா முதல் பக்கத்துலியே உன் பெயர் தான் இருக்கு கவலைப் பட்டதே!" என்றேன்.
கைகளைக் கூப்பி வாங்கிக் கொண்டான்.
"சங்கிலிப் புடிக்கணும், காணிக் கல்லு நடணும், இதெல்லாம் எப்படி?" என்றான்..
"இனிமேல் எல்லாம் ஒழுங்கா நடக்கும்".. என்றேன்.
தலையாரி எங்கள் வண்டியப் பார்த்ததும்,
"டெபுடி தாசில்தாரைப் பாத்து ஒரு வார்த்தை சொல்லிட்டீங்கண்ணா, இன்னைக்கு மத்தியானமே அளந்துடலாம் சார்". என்றார்.
ஓரு வாரத்துக்குள் எல்லாம் நல்லபடியாக முடிந்தது.
பாண்டியன், யார் யாரையோ சரிக் கட்டி, இரண்டே வாரத்தில் ஜாமீனில் ரிலீசாகி, வந்திருந்தான்.
காலையில் பேப்பர் படிக்கும் போது, "அய்யரே! நாளிக்கு உனக்கு சங்குதான்" என் வீட்டு வாசலில் வந்து கத்தி விட்டு, அவசரமாக தன் பைக்கில் விரைந்தான்.
நான் மறுபடியும் பேப்பர் படிக்க ஆரம்பித்தேன்.
என் மனைவி வெளியே நடப்பது எதுவும் தெரியாமல், பூஜையறை உள்ளே யோக நரசிம்மர் படத்துக்கு துளசியால் அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள்.
அதே நேரத்தில் ஓரகடம், பாலூர் சந்திப்பில் அதிவேகமாக வந்த அந்த 16 சக்கர சிமேண்ட் மிக்ஸர் லாரி, கீழே பைக்குடன் விழுந்த பாண்டியனை, தரையில் தேய்த்துக் கூழாக்கிவிட்டு, சிறிது தூரம் தள்ளிப்போய் நின்றது.

Comments