2001- ஜெய் எனும் கிருஷ்ணசாமியின் சின்னச் சின்ன சு"வடு"கள். ரத்தமா? குத்தமா?
மில்லிட்டூன் அனிமேஷன் கம்பெனி.
அவசரமாக கூப்பிட்டார் மானேஜர் கணேஷ். "ஸ்வாமி, இன்னும் 120 அனிமேஷன் பைல்ஸ், வொர்க் செய்ய அனுப்பணும்..எவ்வளவு நேரமாகும்?"
"3 மணிக்கெல்லாம் அனுப்பிடலாம் கணேஷ்" என்றேன்.
"பாஸ் வந்தால் கத்துவார். எவ்வளவோ சீக்கிரம் அனுப்பரீங்களோ அவ்வளவு நல்லது" என்றார்.
"அனிமேஷன் கேரக்டருக்கு தான் 50 கை வைக்கலாம், அனிமேட்டருக்கு 2 கைதான் இருக்கு"...என மனதில் நினைத்துக் கொண்டே நான் குமாரைத் தேடினேன்.
"பாலாஜி குமார் இன்னும் வரலை?"
"இல்லை சார் என்னவாச்சுண்ணு தெரியல, சாதாரணமாக மொதல்ல அவரு தான் உள்ளே நுழைவார்"என்றான் பாலாஜி.
பத்தேகால் ஆகியிருந்தது.
"சார் உங்களுக்கு ஃபோன் வந்திருக்கு" என்றார் பத்மநாபன்.
ஓடினேன். "சார்" என எதிர் முனையில் குமாரு..
குரலில் ஒரு நடுக்கம்.
"என்னப்பா என்ன ஆச்சு? " என்றேன்.
"எங்கம்மாவுக்கு உடம்பு முடியலை சார். ராமசந்திராவுல சேர்த்திருக்கோம்".
அவனது பதட்டம் என்னையும் தொற்றிக் கொண்டது.
"ICU வார்டுல இருக்காங்க, அர்ஜென்டா ஆப்ரேஷன் செய்யாட்டா கஷ்டம்னு டாக்டர் சொல்லிட்டாரு சார்".
"சரி பதறாதே. உங்க அம்மாவுக்கு ஒண்ணும் ஆகாது...
இப்ப உனக்கு உடனே என்ன செய்யணும்? என்றேன்.
"சார் அவங்க வீட்டுக்கு வரணம்னா மூணு ஆப்பரேஷன் அடுத்தடுத்து செய்யணுமாம் . நாளைக்கு மட்டும் அஞ்சு யூனிட் இரத்தம் வேணும், அதுக்கு அடுத்து இன்னும் ரெண்டுமுறை அஞ்சஞ்சு யூனிட் வேணுமாம் சார், கிடச்சிடுமா சார்?".. அவனது வேதனை இங்கே வலித்தது.
"கவலைப் படாதே நான் அரேஞ் பண்ணறேன்" என சொல்லும்போதே என் மனசு யாரை கூப்பிடலாம் என கணக்குப் போட்டது. "நாளைக்கு எத்தனை மணிக்கு அங்கே வரணும் ?"
"10 மணிக்கு சார், எந்த குரூப்பா இருந்தாலும் பரவாயில்லையாம் சார்".
குமாருக்கு கற்பூர புத்தி. கொஞ்சம் சொல்லிக் கொடுத்ததும் சுயமாகவே மிச்சத்தை செய்வான். சீக்கிரமே எங்கிட்டெருந்து அனிமேஷன்
லே-அவுட் செய்யும் கலையை கற்றுக் கொண்டான். என்னுடைய வலது கை இடது கை எல்லாமே அவன்தான். அவனை நம்பி நாலு வருஷம் லீவு போடலாம். வேலை கரெக்டா நடக்கும். இப்போது போர் நடக்கும் யுக்கிரெயின் நாட்டிலிருந்து வரும் அனிமேஷன் குறிப்புகளை முறையாக கிரமப்படுத்தி கொஞ்சம் நாங்களும் வரைந்து சீராக்கி,
அனிமேட்டர்களுக்கு அனுப்பும் டைட்டான வேலை. ஒவ்வொரு செகண்டும் மிகவும் முக்கியம்.
எங்களை எதிர் பார்த்து கீழ் தளத்தில், 70-90 பேர் காத்திருப்பார்கள். அவர்களுக்கு சரியாக அந்த மாசத் துக்கான வேலையை அனுப்புவது எங்கள் வேலை.
அவனுக்கும் சேர்த்து பிசாசு போல வேலை செய்து 120 அனிமேஷன் பைல்களை முடித்து கொடுத்துவிட்டு சாப்பிடப் போன போது நேரம் 2.45 காட்டியது.
என் பழைய கம்பெனியில் நண்பர்களுக்கு போன் செய்தேன், என் தம்பியும், நானுமாக முதல் ஐந்து யூனிட் கொடுத்தோம்.
முதல் ஆப்பரேஷன் முடிந்தது.
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை,
ஆபீசுக்குள் நுழைந்தேன்..
அங்கே வேலை செய்து கொண்டிருந்த ஓவியர்களை ஹாலில் கூப்பிட்டேன்..
"நம்ம குமாரின் அம்மாவுக்கு இன்னும் 10 யூனிட் இரத்தம் தேவை.. குடிப் பழக்கம் இல்லாதவங்க தரலாமாம்" என்றேன்.
உடனே தயாராக 5 பேர் வந்தனர்.
நான் "ஒரு நாள் முன்னாலே சொல்லறேன் ரெடியா இருங்க. வேலையை முடிச்சுட்டு போய் கொடுங்க" என்றேன்.
மெசேஜ் கிடைத்ததும் கிரமப்படி ஆபரேஷனுக்குத் தேவையான இரத்தம் தரப்பட்டது.
குமார் வேலைக்கு வர ஆரம்பித்தான். அவன் முகத்தில் சந்தோஷம்.
"சாமிசார்! உங்களை பாஸ் கூப்பிடராரு, என்றார் பத்மநாபன்.
பாசுக்கு நல்ல ஆகிருதியான தோற்றம். சினிமாவுல அப்பா வேஷம் போடலாம், மேஜர் சுந்தரராஜன் இல்லாத குறைக்கு..(இங்கிலீஷ் வேற குறுக்க குறுக்க பேசுவார்)
உள்ளே போனேன்..சாதாரணமாக உட்காரச் சொல்பவர் அன்று எடுத்ததும் "உன் மனசுல என்னதான்யா நினைச்சுகிட்டு இருக்கே?" என கோபமாக ஆரம்பித்தார்..
"ஏன் சார், என்ன ஆச்சு? என்றேன்
"10 பேரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி இரத்தம் கொடுத்து இருக்கே..இங்கே புரொடக்ஷன் கொரஞ்சு போச்சு! "என குதித்தார்.
"சார் நம்ம ஸ்டாஃபோட அம்மாவுக்கு உடம்பு முடியலை, அதனால் எங்களால முடிஞ்ச ஹெல்ப்..அவ்வளவுதான், அவங்க வேலையை முடிச்சுட்டுதான் இரத்தம் கொடுக்க போனாங்க, புரொடக்ஷன் குறைய வாய்ப்பே இல்லை சார்" என சொல்லி முடிக்கும் முன்னால்....
"வாயை மூடு! நீ உன் மனசுல பெரிய ராஜான்னு நினைசிட்ருக்கியா?" மேலும் இதர வசவுகள் ஆங்கிலத்தில்.
அரை செகண்டில் தான் யார் என மேட்டுக் குடி நிரூபித்தது.
இதற்கு பின்னால் தூபம் போடக்கூடியவர்களை என் மனசு வரிசைப் படுத்தியது.
கத்தி ஓய்ந்ததும் கட கடவென ஒரு கிளாஸ் தண்ணி குடித்தார்.
இந்த கம்பெனி ஆரம்பிக்கும் முன் வீட்டுக்கு வந்து "நீங்க மட்டும் ஜாயின் பண்ணினால் இந்திய பிரெஞ்ச் கொலாப்பரேஷனில் துவங்கிய முதல் அனிமேசன் கம்பெனி இதுவாகத்தான் இருக்கும்" என் பேசிய வாய், மூன்று வருடத்தில் கோடி கோடியாக லாபம் பார்த்ததும் புத்தி மாறி போய்..என்னவெல்லாம் பேசுது?
இரட்டை குழந்தைகள் பிறந்து ஒராண்டாகியிருந்தது. அரை விநாடி யோசித்தேன். மனைவி காலையில் வரும்போது மறக்காமல் குழந்தைகளுக்கு அநிக்ஸ்பிரே டப்பா ரெண்டு வாங்கிவர சொல்லி இருந்தாள், "கையிலே Skill இருக்கு இந்த ஆஃபீஸ் இல்லைன்னா வேற ஆஃபீஸ் போடா சர்தான்"என்றது மனசு.
ஒரு பேப்பரில் கால் கடுதாசி எழுதி வீசி விட்டு வெளியேறினேன்.
வீடு அமைதியாக இருந்தது, நான் மட்டும் ரொம்ப சந்தோஷமாக இருந்தேன். வீட்டுக்கு வந்த என் தங்கை, "என்ன ஜெய், ரொம்ப சந்தோஷமா இருக்கான் இந்த வேலையயும் விட்டுட்டானா?" என்றாள். என் மனைவி ஆமாம் என்பது போல தலையாட்டினாள் .
குமார் மறக்காமல் அந்த வருஷ கிறித்துமஸ் பண்டிகை சமயம் வீட்டிற்கு கேக் கொண்டு வந்தான். "அம்மா சௌக்கியமா? என கேட்டேன்.
"சார், நீங்க இப்ப எங்கே வேலை செய்யறீங்க? என்றான்.
"வேலை கிடைக்கல குமார்..எங்கே போனாலும் ஃபோன் செஞ்சு கெடுத்துடராங்க" என்றேன்.
"பெங்களூரில் ஒரு வேலை கிடைக்கும் போல தெரியுது.. நிச்சயமாக சொல்ல முடியலை, " என்றேன்.
வாழ்கை சக்கரம் ஊர் ஊராக பல ஊர்களை, எனக்கும் என் குடும்பத்துக்கும் காட்டியது. இப்போது நான் கல்கத்தாவில், குடும்பம் சென்னையில்.
21 வருஷமாச்சு. குமாரு இன்னமும் ஒரு நல்ல நண்பனாக இருக்கான்.
அந்த அனிமேஷன் கம்பெனி மட்டும் கொஞ்ச வருஷத்திலே மூடிப் போச்சு.
Comments
Post a Comment