1993 நன்மை பயக்குமெனின் பொய்மையும் வாய்மை இடத்து'
8 வாரம், புகழ் பெற்ற பிரசாத் வீடியோ டிஜிட்டலில் (PVD) டிரெய்னிங்..
அகமதாபாத் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைனில் இருந்து சென்னை வந்திருந்த எனக்கு, வீரா படப் பாடல்கள் இனிமையாக இருந்தன.
"வந்ததுதான் வந்தே, அப்படியே இங்கிருக்கும் போதே, ஒரு பொண்ணைப் பார்த்து ஓகே பண்ணிட்டு போயிட்டேன்னால், ஒரு வருஷத்துத்துல, கல்யாணம் வச்சிக்கலாமோல்யோ?" இது என் அம்மா..
நான் நிமிர்ந்து பார்த்தேன்.
"அம்மா இன்னும் 3 செமஸ்டர் பாக்கி இருக்கும்மா.. முடிச்சு வர இன்னும் குறைந்தது இரண்டு வருஷமாவது ஆகும்மா" என்றேன்.
கவனத்தை பிரசாத் ஸ்டுடியோவின் பக்கம் திருப்பினேன்.
தாத்தா L.V.Prasaad ஆரம்பித்த ஸ்டூடியோ அவரது பேரன், சாய் பிரசாத் பொறுப்பில் இருந்தது.
மஹா அறிவாளி, அமெரிக்காவில் படித்தவர். கடுமையான தீ விபத்துக்குப் பின், கம்பெனியை எழுப்பி நிறுத்தியிருந்தார்.
மதியம், அனிதா, ஜென்னி இருவரையும், சாப்பிடும்போது பாலாஜி அறிமுகப் படுத்தினான்.
இருவரும் சகஜமாக பேசினர். அனிதா ஹிந்தியிலும் வேகமாகப் பேசினாள்.
ஓவியனாகும் அடிப்படைத் தகுதி, நல்ல ரசிகனாக இருக்க வேண்டும்.
நான் இவர்களை ஒவியனான பின்னும் ரசிக்கத்தொடங்கி இருந்தேன்.
நேரம் மிகக் குறைவு. 8 வாரங்கள்தான்.
சீவலப்பேரி பாண்டி படத்தின் ஒளிப்பதிவாளர் அரவிந்த், ஸ்பெஷல் இஃபெக்ட் செய்ய வந்திருந்தார். 20 பேர், தீப்பந்ததுடன் இருளில் ஓடுவதை 200 பேர் ஓடுவதாகக் காட்ட வேண்டும்.
இதுதான் என் முதல் வேலை.
ராஜாராம் எனும் பூபுட்டி, தொழில் சொல்லிக் கொடுத்தான். ஹிந்து ஆபீசில் டிசைனராக வேலை செய்ததால், கம்ப்யூட்டர் பயம் இல்லை. முதல் மாதிரி வரைவு முடிக்க 6 நாள் ஆகியது.
நான் மதியம் சாப்பாட்டு வேளைக்காக காத்திருப்பேன். இருட்டிலேயே வேலை செய்பவர்களுக்கு அந்த ஒரு மணிநேரம் நல்ல ரிலீப்.
கலகலவென பேசிக் கொண்டிருப்போம். பாலாஜியும், ராமாராவும், அடிக்கும் ஜோக்குகள் சூப்பராக இருக்கும்.
அம்மா மறுபடியும் ஆரம்பித்தாள், "ஜாதகம் வந்திருக்கு, பொருத்தம் நல்லா இருக்கு, அவா ஆத்துல எல்லாரும் "பரோடா"க்காராளாம்.
மாமாப் போனதுக்கப்புறம், சென்னைக்கே வந்துட்டாளாம். ஒரு பொண்ணு உன்கூட பிரசாதுலதான் வேலை பார்க்கராளாம், இந்த ஜாதகம் அவளுடய அக்காவுடையதாம் , நீ என்ன சொல்றே? என்றாள்.
உடனே புரிந்தது, அனிதாவின் இரண்டுநாள் ஸ்பெஷல் கரிசனத்தின் காரணம்.
கல்யாணம் வேணாம்னு தான் அகமதாபாத்தில் படிக்கவே போனேன்..மறுபடியும் துரத்துதே...
"இப்போதைக்கு வேணாம்னு சொல்லிடும்மா, பிளீஸ்" என்றேன்.
மறுநாள் டைரக்டர் பிரதாப் போத்தன் வந்திருந்தார்.. தீப்பந்த காட்சி திருப்திகரமாக வந்திருந்ததால் , ஒரு தோட்டா காட்டுக்கு நடுவே சீறிப்பாய்ந்து போய், சினிமாவின் பெயரை காட்டும்படி, செய்யச்சொன்னார்.
ராமாராவ், சாப்பாட்டு இடைவெளியில் "இன்னா சார், அனிதா உங்களை பெஷாலா கவனிக்கிது?" என்று கலாய்த்தான் தம் அடித்துக் கொண்டே.
"அதெல்லாம் ஒண்ணுமில்லை ராவ்" என்றேன்.
"ஏதாவது ஒர்க் அவுட் ஆனா, எங்களுக்கு சரக்கு வாங்கித் தரணம், ராஜாராமுக்கு ரெண்டு கல்யாணி பீர் மட்டும்" என்றான். ஆமோதிதான் பாலாஜி.
"அடப்போய்யா அதுக்கெல்லாம் ரொம்ப வருஷமாகும்". என்றேன். அவர்கள் நம்பவில்லை.
ரெண்டு நாளாக, ஜென்னி மட்டும் சாப்பிட வந்தாள், அனிதாவை காணோம்..
டீ குடிக்க போனபோது அனிதாவிடம் "ஹலோ" சொன்னேன், மூஞ்சியை திருப்பிக் கொண்டாள்.
எனக்கு ஒண்ணும் புரியவில்லை..
நாம கல்யாணம் வேண்டாம்னு சொன்னதால கோபம் போல, என நினைத்துக் கொண்டேன்.
எல்லாம் நல்லதுக்கு தான். வந்த வேலையப் பார்ப்போம் என, முடிவெடுத்தேன்.
ராமாராவும் நானும், பஸ்ஸில் வீட்டுக்கு போகும் போது, "அனிதா, சொம்மா உங்களைப் பற்றி, நீங்க நல்லவரா?, தண்ணி அடிப்பீங்களா?ன்னு எதோ கேட்டுகினே இருந்துச்சி, பதிலுக்கு நானும், "வெள்ளை சட்டைக்குள்ளே ஆளு அடாசு, தெனிக்கும் தண்ணியடிக்காமல் தூங்க மாட்டாரு, வாரக் கடைசில நிறைய ஃபிகர் ஓட்டுவாருண்ணு சொல்லிட்டேன்! அதான் ரெண்டு நாளாக நம்மளோட சாப்ட வரமாடீங்குது சார்" என்றான்.
நான் சிரித்தேன்..
இவனின் இந்த பொய்கள் என்னைக் காப்பாற்றியுள்ளன. இருக்கட்டும்.
இவனுக்கு காரணம் தெரிவதால் பெரிய ஆபத்தில்லை.இன்னும் ஒரு வாரம் தான் பாக்கி.
"அதில்லை ராமராவ், அந்தப் பெண்ணின் அக்காவுக்கு என் ஜாதகம் சரியாப் பொருந்தியிருக்கு"
அதனால் என்னைப் பற்றி விசாரிச்சு இருக்கு, நம்ம ஆபீசுல வேற யாருக்கும் இது தெரியாது, அவளைத் தவிர, இப்ப உனக்கு".. என்றேன் சிரித்துக் கொண்டே.
பதறினான் ராமராவ்..."சாரி சார், தெரியாமல் நான் சொன்னது, உங்க லைப்பையே பாழாக்கிடுச்சே! ஒரு பத்தாயிரம் "சாரி" மூணே செகண்டில் சொன்னான்.
"அடுத்த ஸ்டாப்புல இறங்கி அவளாண்ட, உண்மைய சொல்லிடறேன் சார், இல்லைன்னா தூக்கமே வராது சார்!" என்றான்.
சொன்னபடி இறங்கி ஓடிவிட்டான்.
அடுத்த நாள், அவர்கள் அனைவரும் ஒன்றாக சாப்பிட வந்திருந்தனர்,
" ஃப்ரெண்ட்ஸ், இன்னைக்கு தான் என் கடைசி நாள், எனக்கு ஒரு சின்ன பிராஜெக்ட் கிடைச்சிருக்கு இனிமேல் இங்கே வர மாட்டேன், உங்களோட வேலை செஞ்சதை என்னால் மறக்க முடியாது, நான் எதாவது தப்பா நடந்திருந்தால் ரொம்ப சாரி" என்றேன்.
மானேஜர் சந்திரசேகரிடம் நற்சான்று வாங்கிக் கொண்டு, அனைவருக்கும் கைகுலுக்கி விட்டு, நடையைக் கட்டினேன்.
இரண்டு ஜோடிக் கண்கள் மட்டும் வேதனையுடன் என்னைப் பார்த்தன.
Comments
Post a Comment