1990. ஜெய் எனும் கிருஷ்ணசாமியின் சின்னச் சின்ன சு(வடு)கள். கடைசி மாமன்னரும், காணமல் போன காதலும்!
ஹிண்டு ஆபீசில் மதியம் சோறு தின்ற பின், நண்பர்களுடன் அண்ணா சிலை வரை ஒரு சின்ன
நடை தினமும் உண்டு. அவர்கள் ஆளுக்கு ஒரு தம் பற்ற வைப்பார்கள். நான் டீ மட்டும் குடிப்பேன்.
ஒரு நாள், நல்லா பட்டை உறிக்கும் வெய்யில். நாங்கள் கீதா கபே வரை நடந்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தோம்.
"ஸீக்கிரம் போகணும் இல்லைன்னா
NVN திட்டுவாரு!" என்றார் உதய ஷன்கர்.
நான் எங்களுக்கு சற்று முன்னால் போன மூன்று பெண்களில் ஒருத்தியைக் காட்டி, "சரியான லூசு!
கொளுத்துர வெய்யிலில் சைனா சில்க் கட்டிக்கிட்டுப் போகுது பாரு!" என்றேன்.
விஜய் என்னைப் பார்த்து "நீ ஒருநாள் நல்லா உதைப் படப் போறே! அன்னைக்கு தான் உனக்கு புத்தி வரும்"என்றார். நான் "அப்போ பார்த்துக்கலாம்" என்றேன்.
அந்தப் பெண் சட்டெனத் திரும்பி, "எப்படி இருக்கே ஜெய்"? என்றாள்.
பகீரென்றது! என் தூரத்து மாமா மகள்.
எப்போதாவது கல்யாணங்களில் பார்த்தது உண்டு. எங்கம்மா இதுவரை ஆறு முறை பெண் பார்க்கக் கூட்டிபோய் காட்டாத அழகு. பதறிப் போனேன். "அடடா, இவளைப் போயா கிண்டல் பண்ணிட்டேன்?" அரை செகண்டில் செல்லாக் காசு போல உணர்ந்தேன்.
"ஹி ஹி நல்லா இருக்கேன்! என ஏகத்துக்கு அசடு வழிந்தேன்.
"இங்கே எங்கே நீங்க! நீ எப்படி?" என உளரினேன்.
அவள் அதை ரசித்தார்ப் போல இருந்தது.
"மெக்கோ ட்ரானிக்ஸ் பில்டிங்குலதான் என்னோட ஆபீஸ். நாங்களும் சாப்பாட்டுக்கு அப்புறம் ஒரு சின்ன வாக் வருவோம். என்றாள். "உன்னை ஏற்கெனவே அந்த பழய புஸ்தகக் கடை வாசல்ல பார்த்துட்டேன்" என்றாள்.
இது தெரியாமல் நான் வேறு இவளைப் பற்றியே கமெண்ட் அடித்துக் கொண்டு பின்னாலேயே..
"ஓகே அப்புறமா பார்க்கலாம்!" என்று கூறி விலகினோம்.
உதய் ஷன்கர், "சாமி ஒரு வழியா ஒரு பொண்ணு கிட்டே மாட்டிக்கினான்" என கலாய்த்தார். "நீங்க வேற! உதய்" என நல்லவனாட்டம் முகத்தை வைத்துக் கொண்டு லைட்டா சிரித்தேன்.
இதுவும் நல்லா ஒரு சூப்பர் பீலிங்குதான்!..
ஆபீஸை நெருங்கினோம். "சீக்கிறம் கல்யாண சாப்பாடு போடுய்யா!" என்றார் உதய்.
ரெண்டு மூணு முறை அவளை ஆபீஸில் சந்தித்தேன்.. "உனக்கு எப்போ ஆபீஸ் விடும்னு சொன்னால், அப்போ வந்து பிக்கப் பண்ணிகிறேன்" என்றேன், பெரிய எக்ஸ்பர்ட் போல. .
என் மனது "இவள் தான் என முடிவு செய்திருந்தது". (நிறைய பெண் பார்த்து அலுத்திருந்தேன்).
"என்னோடு சனிக் கிழமை சினிமாவுக்கு வருவியா?
ரெண்டு டிக்கெட் வாங்கிடறேன்" எனக் கேட்டேன்.
"சரி! அதுக்கு முன்னாலே உன் கிட்டே ஒரு விஷயம் சொல்லணும்" என்றாள்.
சாயந்திரம் அவளை மூர் மார்க்கெட் எலக்ட்ரிக் ட்ரெயின் ஸ்டேஷன் வரைக் கூட்டி போனேன். ஒன்றும் சொல்லாமல் என்னுடன் வந்தாள். நானும் கேட்கவில்லை.
"நான் "Last emperor" படத்துக்கு ரெண்டு டிக்கட், நாலு மணி ஷோவுக்கு வாங்கிட்டேன், மறக்காமல் வருவியா?" என கேட்டேன். "பாய் ஜெய்! என்றாள்" ..
என் கையில் 2 டிக்கெட். ரயில் நகர்ந்தது, அவள் பதில் சொல்லும் முன்னால்.
சனிக் கிழமை ஆபீசில் லீவு சொல்லி விட்டு, அவசரமாய் தியேட்டருக்கு மூணு மணிக்கே வந்து தேவுடா காத்துக் கொண்டிருந்தேன்.
3.30 ஆச்சு.. பிளட் பிரெஷர் ஏற ஆரம்பித்தது. 3.45 ஆச்சு. ஒரு நடை வேகமாக சாந்தி தியேட்டர் பஸ் ஸ்டான்ட் வரை போய் வந்தேன். அவள் வரவில்லை..
4.00 மணி தியேட்டரில் பெல் அடித்து பில்டர் வில்ஸ் அட்வர்டைஸ்மென்ட் போட்டு விட்டான்..
தியேட்டர் வாசலில் இருந்த கும்பல் கரைந்திருந்தது.
எனக்கு பைத்தியம் பிடிக்கும் போல இருந்தது.
"ஒரு வேளை அவங்க வீட்டுல தெரிஞ்சு, ஏதாவது ஏடாகுடமா ஆகியிருந்தால்?"
"நம்பிக்கையா வருவேன்னு சொன்னாளே! "
அவள் வரவில்லை..
சோர்ந்து போய் படம் பார்க்க மனமில்லாமல் வீடு வந்து சேர்ந்தேன். மறுவாரம் அவளை ஆபீசில் போய் டிஸ்டர்ப் செய்ய மனசு வரவில்லை.
பைத்தியம் பிடித்தார் போல இருந்தது. ஈவினிங் 3-10 வரையிலான ஷிப்ட்டுக்கு மாற்றிக் கொண்டேன்.
நண்பர்களுக்கு புரிந்து விட்டது. உதய் "ஏதாவது ஹெல்ப் வேணுமா? வீட்டில வந்து சொல்லவா?" என்றார்.
எங்க வீட்டு நிலைமை அதற்கு இடம் கொடுக்க வில்லை.
அம்மாவிடம் சொல்லிப் பார்த்தேன். "அம்மா அந்த ராஜு மாமா பொண்ணைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?" என பீடிகை போட்டேன்.
"அவளை எனக்கு பிடிச்சிருக்கு, கேப்பியா?" என்றேன்.
"அவ சென்ட்ரல் கவர்மண்ட்டுல இருக்கா, நல்ல ப்ரமோஷன் கிடைக்குற ஜாப்! உன் ஒன்றையணா சம்பளத்துக்கு, அவா வீட்டுல போய் பொண்ணு கேக்க சொல்லறீயா? முட்டாள்" என்றாள்.
இதுக்கப்புறம், காதல் யோக்கியமானவங்க செயலாக ஏனோ தோன்ற வில்லை. மனதுக்குள் P.S.வீரப்பா வந்து, "இந்த நாடும் நாட்டு மக்களும், நாசமாகப் போகட்டும்" என்று அறைக் கூவினார். உன்மத்ததின் உச்சத்தில் இருந்தேன். எதுவுமே பிடிக்கவில்லை.
ஒரு வாரம் கழித்து, ஆபீசிலிருந்து வீட்டில் நுழைந்ததும்
அம்மா ஒரு பத்திரிகையை காட்டினாள். "நானும் நீயும் தான் போகிறோம், ஞாயிறுக்கிழமை கல்யாணம்..வரமாட்டேன்னு சொல்லாதே!" என்றாள்.
வேறு யாரோ பெயருடன் அவள் பெயர்.
அமைதியாக அம்மாவுடன் கல்யாணத்துக்குப் போனேன். பெஸ்ட் விஷ்ஷஸ் சொல்லிவிட்டு, திரும்பி வரும்போது, அம்மா சொல்லிக் கொண்டு வந்தாள்.
"அவனோட நாலு வருஷமாப் பழகறாளாம்,
ராஜு மாமா மாட்டேன்னு சொல்லவே, உன்னைக் கையெழுத்துப் போட கூப்பிட இருந்தாளாம். அதுக்குள்ளே வீட்ல தெரிஞ்சு, மாமா அவளை ரூம்ல
பூட்டி வச்சுட்டாராம். அப்புறமா மாமா மனசு மாறி அவசர அவசரமா"....
மிச்சக் கதை எதுவும் காதில் விழவில்லை...ஏன்னா ...எங்க அம்மா நல்லா கதை எழுதுவார்கள்.
அடப் போங்கடா...
மனசுக்குள் பெர்நார்டோ பெட்றோலுஸியின்
கடைசி மாமன்னரும், சீனாவையே தொலைத்து விட்டு
என்னைப் போலவே நின்று கொண்டிருந்தார்.


Comments
Post a Comment