1989 - ஜெய் எனும் கிருஷ்ணசாமியின் சின்னச் சின்ன சு"வடு"கள். Armour of Godம், அட்டாணி கட்டிலும்.

வத்சன் எனப்படும் ஸ்ரீவத்சன் என் மாமா மகன். திருவான்மியூர் வீட்டில் ஒரு நாள் எல்லோரும் ஏதோ ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தனர். நானும் அவனும் மட்டும் வீட்டில் இருந்தோம்.
தலைவர் ஜாக்கீ ச்சான் படம் அலங்கார் தியேட்டரில் வாங்கடா பார்த்துக்கலாம் என வடிவேலு போல எங்களுக்கு சவால் விட்டது. நேரம் காலை 9.15 ஆஹா 10 மணிக்கு படம் போட்டுடுவாங்களே! வேறு எந்த யோசனையும் இல்லை. நான் ஓட்டினால் மட்டும் ஓடும் என் சில்வர் ப்ளஸ் மொபெட்டை ஒரு உதை, வெகு விரைவில் நானும் அவனும் மெரினா கடற்கரை அருகே பறந்து கொண்டிருந்தோம். (என்வண்டியின் டாப் ஸ்பீடு 45km/hr. என்பது வேறு விஷயம்) அலங்கார் தியேட்டரில் டோக்கன் போட்டு, டிக்கெட் வாங்கி, சீட் தேடி அமர்வதற்கும், படம் போடுவதற்கும் சரியாக இருந்தது. படம் சூப்பர் விறு விறு. பழைய GLOBE தியேட்டர் பின்னர் உருமாறி "அலங்கார்" ஆனதாக தாத்தா ஒருத்தர் இண்டெர்வெல்லில் சொன்னார்.
படம் விட்டதும் , அண்ணா சாலை கீதா பவனில் மசாலா தோசையை இருவரும் வெட்டி விட்டு, வீட்டுக்கு வந்தோம்.
தலைவர் ஜாக்கீ ச்சான் படத்தின் ஒரே சிறப்பு அவரது சுறுசுறுப்பு நமக்கும் தொற்றிக்கொள்ளும். ஏதாவது சேட்டையை செய்ய நம்மை தூண்டிவிடும். படத்தை சிலாகித்தவண்ணம் உள்ளே நுழைந்ததும், கால் செருப்புகள் மஹா வேகத்தில் உதற பட்டன. இருவர் மண்டையிலும் தலைவர் ஜாக்கீ ச்சான் முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தார். வத்சன் (அப்போது வயது 6) ரெண்டே ஸ்டெப்பில் பெட் ரூம் ஜன்னல் கம்பியில் எகிறி ஏறி , அங்கிருந்து ரிவர்சில் பக்கத்தில் இருந்த Rose Wood போல கலர் அடித்து எங்க அப்பா ஏமார்ந்து வாங்கிய 'படாக்' மர கட்டிலின் மேல் அடுக்கி இருந்த படுக்கைகள் மேல் விழுந்து உருண்டான். இவனாலேயே முடியுமானால் என்னாலே முடியாதா? எனும் ego தூண்டிவிட, நானும் அதே போல ஒரு ரிவர்ஸ் பிளிப்.
அந்தக் கட்டில் நாங்கள் 1971ல் வாங்கியது. வாழ்க்கையின் பல விஷயங்களை தெரிந்து கொண்டு மெளனமாக எங்கள் வீட்டுக்கு உழைத்து கொண்டிருந்தது. எங்கப்பா பழசு என பல விஷயங்களை தூக்கிப் போடுவதை விரும்பாதவர். நாங்களும் இந்த புதிய வீட்டில் இது எதற்கு இடத்தை அடைத்து கொண்டு என்று சொல்லிப் பார்த்து ஓய்ந்திருந்தோம். அவர் பிடிவாதம் எங்கள் எல்லோரையும் விட சற்று அதிகம். "என்னைக்காவது அதுவா உடைஞ்சால் தூர போடலாம். அதுவரை இருக்கட்டும்!" என சொல்லிவிட்டார்.
ரிவர்ஸ் பிளிப் அடித்த நான் கட்டிலின் தண்டுவடபகுதியில் எனது 65kilo வெயிட்டுடன் மேலிருந்து வேகமாக இறங்க, வத்சன் லாவகமாக நகர்ந்து கொள்ள, நான் நடுவில் ப்ளைவுட் மீது வேகமாக விழ, கட்டில் தன் கடைசி மூச்சை வேகமாக வெளியேற்றியது.
எனக்கு முதுகில் செம்ம அடி, மொத்த படுக்கைகளும் என் மீது விழுந்திருந்தன. கூடவே ஸ்ரீவத்சன் என் தலை மீது. ஒரு வினாடியில் அந்த இடமே ஜாக்கீ ச்சான் செட் போல கட்சி அளித்தது.
கல்யாணத்துக்கு போயிருக்கும் திரு .சீதாராமன் தம்பதியர் வருவதற்குள் இந்த இடத்தை சரி செய்ய வேண்டும் என்ற உதறல் தொற்றிக்கொள்ள, இருவரும் படுக்கைகளை ஹாலில் அடுக்கி விட்டு, கட்டிலை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்தோம், மேல் மாடியில் இருந்த நடை மேடை வரை எடுத்துக் போய் வைத்துவிட்டு. படுக்ககைகளை ஒரு இரும்பு மடக்கு டேபிள் மேலே வைத்து விட்டு திருடனுக்கு தேள் கொட்டியது போல டிவி பார்த்துக்கொண்டிருந்தோம்.
அப்புறம் நடந்த விஷயங்கள் முக நூல் நாகரீகம் கருதி விட்டு விடுகின்றேன். அட்டாணியில் கட்டில் அமைதியாக உறங்கி கொண்டிருந்தது அடுத்த போகிப் பண்டிகை வரை.

Comments