1985 ஜெய் எனும் கிருஷ்ணசாமியின் சின்னச் சின்ன சுவடுகள். எல்லோராவும் எண்ணெய்ப் பிசுக்கும்.
எங்கள் ஓவியக் கல்லூரியின் வருடாந்திர டூர், எங்களுக்கு இந்தியாவின் கலைநயமிக்க இடங்களையும், அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் அனுபவ முறையில் படிப்பிக்கும். எல்லோரும் வரைந்து தள்ளுவோம்.
"அசோகா ஓட்டலில்" நண்பர்கள் கிடைத்தையைல்லாம் தின்றனர். மாந்தோப்பு வழியாக நடந்து போனால் 3 கிலோ மீட்டரில், எல்லோரா கிராமம் வரும். அந்த ஊரின் சத்திரத்தில் ஒருநாள் தங்கி மறுநாள் குகைகளைப் பார்ப்பது என முடிவானது.
"அய்யரே! எண்ணெய்க்கு ஹிந்தில என்னா பேரு? என்று டவலோடு வந்தான் முனிச்சாமி. "சீக்கிரம் சொல்லுயா குளிக்கப் போவணுமில்ல? உடம்பெல்லாம் ஒரே சூடாகிடுச்சு என்றான் ராஜா செல்வன்.
"தேல்" என்றால் ஆயில்...சொல்லி வாங்கிக்கங்க என்றேன் நான்.
அது ஒரு 16ம் நூற்றாண்டின் கிராமம்.
2 புட்டி "தேலுடன்" வந்தனர். ஆனந்தமாக முனிசாமி தடவிக் கொண்டான். ராஜாசெல்வனும் தடவிக் கொண்டு ஜிம்பாடியும், காட்பாடியுமாய், பெரிய கிணத்தடிக்குச் சென்று தண்ணி சேந்த ஆரம்பித்தனர்.
சோப்பு தடவியதும் சோப்பு உடம்போடு ஒட்டி கொண்டது. அந்த ஊரில் கடுகெண்ணெய் மட்டும் தான் கிடைக்குமாம். பச்சைத் தண்ணியும் கடுகெண்ணெயும் ஆபோசிட் காம்பினேஷன்.
ஊர்க்காரர்கள் அதிசயமாக பார்த்தனர். இவர்கள் இருவரும் எல்லோரிடமும் சீகக்காய்க்கும், ஷாம்புவிற்கும், டவலுடன் அலைந்தனர். கிடைச்ச சீகக்காயும் அடையடையாய் ஒட்டிக் கொண்டது.
பசங்களெல்லாம் சேர்ந்து இருவரையும் ஓட்ட ஆரம்பித்தனர். ஒருத்தன் "எட்டி நில்லூங்கரான்", இன்னொருத்தன் "பக்கம் வராதே! வீச்சடிக்குதுங்கரான்".
ரெண்டு பேரும் 'திரு திருண்ணு' முழிச்சாங்க. இவன் அவனுக்கு சுத்தம் பண்ண, அவன் இவனுக்கு சுத்தம் பண்ண, நாலே சோப்பும், நாற்பது வாளித் தண்ணியும் தானாச்சு. ஒரு வழியாக குளிச்சு முடிச்சானுங்க.
ரெண்டுபேரும் கொல வெறியுடன் என்னிடம் வந்தனர்.
" தேல்" என்றால் என்ன? உண்மையைச் சொல்லறியா! உதைக்கவா? என்றனர்.
வேங்கயன் மவன் ஒத்தேல மாட்டிகினேன் மராட்டிய தேசத்துல....
சட்டுன்னு ஒரு யோசனை!
"போய் அந்த சிந்திக்காரப் பொண்ணு சோனு கிட்ட கேளுங்கையாவென" கூடப் படிக்கும் பொண்ணு பக்கம் மடை மாற்றி விட்டேன்.
அவள் இவங்களைப் பார்த்து, சாமி சொன்னது நிஜம் என்றதும்தான் என்னை விட்டனர்.
இவங்க 2 பேர் உபயத்தில், மிச்ச டூர் கலகலப்பாக கழிந்தது.
Comments
Post a Comment