1984, ஜெய் எனும் கிருஷ்ணசாமியின், சின்னச் சின்ன சு'வடு'க்கள் செங்குருதியும், செம்பருத்தியும்…
ஓவியக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன்.
ஒரு சர்குலர் வந்தது, வகுப்பாசிரியர் முத்துசாமி எங்களையெல்லாம் கூப்பிட்டார். "நம்ம பாரதப் பிரதமரை ரெண்டு மெய்க்காப்பாளர்கள் சுட்டுட்டங்களாம், இன்னைக்கு நீங்க வீட்டுக்கு ஜாக்கிரதையா போயிட்டு, பேப்பர்ல காலேஜ்கள் திறக்கும்ன்னு போடும் தேதியில் திரும்பி வாங்க" என்றார்.
அவர் அமைதியா சொன்னாலும்,
எங்களுக்கு பஸ் கிடைக்கணுமமே என்ற பதைப்பு ஸ்டார்ட் ஆகிவிட்டது.
நேரம் சுமார் ரெண்டு இருக்கும், அன்னைகுன்னு பார்த்து ஒருத்தனும் லிஃப்ட் தர மாட்டேங்கரான்.
பஸ்செல்லாம் பாடிகார்ட் முனீஸ்பரர் கோவில் பின்னாலிருந்த பணிமனைக்கு பதறி அடித்துக்கொண்டு விரைந்து கொண்டிருந்தன.
ஜோல்நானாப் பை முழுக்க போஸ்டர் கலர்களும், ஆயில் கலர்களும், ஏகப்பட்ட பிரஷ்களும் ஒருபக்கமா இழுத்தன. நடந்தாலே டொடக் டொடக் என ஒரு சத்தம். பெரியமேட்டிலிருந்து திருவான்மியூர் வரை இன்னைக்கு நடராஜா சர்வீஸ்தான் என மனதில் நினைத்துக் கொண்டேன்.
கூவத்தின் ஓரமாக சித்ரா டாக்கீஸ் தாண்டி பாலத்தைக் கடந்து, அலங்கார் தியேட்டரை நெருங்கும் போது, தெருவெங்கும் பாட்டில்கள் உடைந்து கண்ணாடி சில்லுகள் புரட்சி செய்து கொண்டிருந்தன. ஒருவன் பெரிய கடப்பாரையால், ஷட்டர் பூட்டை நெம்பி உடைத்ததும், அவன் நண்பர்கள் கார்களின் உதிரிப் பாகங்களை ஜெனரல் பேட்டர்ஸ் ரோடில் வீசி எறிந்து மகிழ்ந்தனர். வேறு சிலர் கையில் கிடைத்த சர்தார்ஜி ஒருத்தனை கிடைத்த கட்டையால் அடித்து இரத்த விளாராக்கிக் கொண்டிருந்தனர். ஒரு பக்கம் வண்டி ஆயிலை தரையில் கொட்டி, கோணியை சுருட்டி தீப்பந்தம் செய்தான் ஒருத்தன், மற்றவன் அதைப் பத்தவைதான். ஏன் என கேட்கவே முடியாத ஒரு வெறியும், கோபமும், அவர்கள் முகத்தில் இருந்தது. நான் அப்படியே ஒரு ஓரமாக midland தியேட்டரை கடந்து ராயப்பேட்டையை நெருங்கினேன். அங்கே ஒரு கும்பல் கிடைத்த வாகனத்தின் மேலெல்லாம் கல்லால் அடித்துக் கொண்டிருந்தது.
சோபா செட்டு செய்யும் ஒரு முட்டு சந்தில் சிறிது ஒதுங்கினேன்.
"சார்" என்று ஒரு குரல், ஒரு பெண் சுமார் 25வயதிருக்கும் தலையில் செம்பருத்தி பூ வைத்திருந்தாள்.
"எனக்கு லாயிட்ஸ் ரோடு வரைக்கும்
கூட வர்றீங்களா?" என்றாள்.
கூட்டம் திமுதிமு என வேறு திசையில் ஓடியதும், நானும் அவளும் ஆற்காட்டு நவாபு வாரிசுகள் வசிக்கும் அமீர் மகாலைக் கடந்து வலது புறச் சந்தில் வேகமாக நடை போட்டோம்.
"வீடு எங்கங்க? என்றாள். "திருவான்மியூர்" என்றேன்.
"நீங்க எங்க வேலை செய்யுறீங்க?" என்றாள் அவள்.
"படிக்கிறேன்" என்றேன்..
"இன்னுமா?" என்றாள் கண்களை அகலமாக விரித்து.
"ஆமாம் அஞ்சு வருஷப் படிப்பு இன்னும் ரெண்டு வருசம் பாக்கி என்றேன். ஓவியம் படிக்கிறேன்" என்றேன், சொல்லின் முரண் எனக்குள் ஒரு புன்சிரிப்பு உருவாக்கி இருந்தது.
"என்னவெல்லாம் வரைவீங்க?" என்றாள்.
"எதை வேணும்னாலும் , இப்போதைக்கு எதிரே யார் உட்கார்ந்தாலும்". என்றேன்.
"என்னைக் கூட அப்படியே வரைவீங்களா?
"ம்ம் ஆமாம் வரையமுடியும்" என்றேன் உறுதியாக.
"எவ்வளவு நேரம் பிடிக்கும்?"
"நாற்பது நிமிஷம்" என்றேன்.
இன்னும் பாதி தூரம் கூட நடக்கவில்லை..மண்டைக்குள், மயிலாப்பூர் சித்தி வீட்டுக்கு போயிடலாமா? என ஒரு குரல் ஒலித்தது.
ராயப் பேட்டை ஆஸ்பத்திரியின் பின்புறம் வழியாக வந்து, அப்படியே தொடர்ந்து நடந்தோம்.
கையில் பெரிய டிபன் பாக்ஸ் வைத்திருந்தாள், தோளில் ஒரு டம்பப் பை தொங்கிக்கொண்டிருந்தது. முகத்துக்கு பொருத்தமில்லாத மஞ்சள் கலரில் ஸ்டிக்கர் பொட்டு.
"இன்னம் கொஞ்ச தூரம் தான், நான் தங்கியிருக்கும் லாட்ஜ் வந்துடும் சார்" என்றாள்.
பெரிய இந்திரா காந்தியின் படத்தை ரோடு முனையில் வைத்து உண்டி குலுக்கி , அன்றைய சுண்டக் கஞ்சிக்கு வழி தேடிக் கொண்டிருந்தனர் சில குடி மகன்கள். சில பெண்மணிகள் சொந்தப் பாட்டி இறந்தார் போல நெஞ்சில் அடித்து
தங்கள் ஆற்றாமையை காட்ட பிலாக்கணம் வைத்து ஸ்ருதி சேர்த்துக் கொண்டிருந்தனர்.
"இந்த ஆம்பளைங்க எல்லாருமே ரொம்ப மோசம்! எப்படி அந்த அம்மாவை கொல்ல மனசு வந்ததோ?" என்றாள்.
அதற்கு காரணம் வேறே! என சொல்ல எத்தனிக்கும் முன்னால்.....
திடீரென ஒரு போலீஸ் வேன் மறித் தார்ப் போல வந்து நின்றது.
"யார்ரா நீ? என்றார் போலீஸ்காரர்.
"ஸ்ஸ்டூடன்ட் சார், ஓவியக்கலூரியில படிக்கிறேன்" என்றேன்.
"ID கார்டு வச்சிருக்கியா?" என்றவர், வாங்கிப் பார்த்து விட்டு ,
"ஏய் நீ யாரு ? எங்கே இருக்கே?" என்றார் செம்பருத்தியைப் பார்த்து.
"இங்கே தான் சார், பக்கத்துல இருக்கேன்" என்று குழரினாள்.
"இவன் என்னா உன் கஸ்டமரா?" என்றார்.
"இல்லை சார்" என்றேன் வேகமாக.
"ஊர் பூரா கலவரமா இருக்கு! உனக்கு காலேஜுப் பையன் சோக்கு கேட்குதா?" என்றார்.
அவள் பதில் சொல்லும் முன்னால் லட்டிக் கொம்பு பேசியது.டிப்பன் பாக்ஸ் தன் உள்ளே இருந்த தக்காளி சாதத்தை எல்லாம் உமிழ்ந்து விட்டு உருண்டோடியது.
"டேய்! அய்யரே! மருவாதியா வூடு போயி சேரணம், கண்டவக் கிட்டேயைல்லாம்
சேரக்கூடாது" என்றவர் அவளது பிட்டத்தில் லத்தியால் ஓங்கி அடித்தார். "ஏறுடி வண்டியில!" என்றவர், கூடவே எழுத முடியாத வசவை உதிர்த்தார்.!" சத்தம் போடாமல் ஏறினாள்.
கதவு சாத்தப் பட்டது..
போலீஸ் வண்டியின் வட்ட ஓட்டையில் அவள் கண்கள் "என்னைக் காப்பாற்ற மாட்டாயா? எனக் கேட்டன.
"செம்பருத்திக்கு என்னவாகியிருக்கும்? " என்ற சிந்தனையில் நடந்தவனுக்கு,
திருவான்மியூர் வீடு
விரைவில் வந்து விட்டது.
செங்குருதியில் நனைந்த இரும்புப் பெண்மணி இந்திரா காந்தி மறந்தே போயிருந்தார்.
"இந்த ஆம்பளைங்க எல்லாருமே ரொம்ப மோசம்!" அவள் சொன்னது என்னையும் சேர்த்தே சொன்னாற் போலிருந்தது.

Comments
Post a Comment