1982- ஜெய் எனும் கிருஷ்ணசாமியின் சின்னச் சின்ன சு"வடு"கள். "மாந்த எண்ணையும், பூணுல் மோதிரமும்".
" டேய் ஜெய்! IMPCOPS ஆபீசில் போய் ஒரு பாட்டில் மாந்த எண்ணையும் வாங்கி கொண்டு, எங்க ஆபீசில் வந்து கொடுத்துட்டு போ!" இது எனது அப்பாவின் ஆர்டர். யாரோ முகம் தெரியாத அப்பாவின் நண்பர் மகளுக்காக பணிக்கப் பட்டேன்.
11 மணிக்கு சொன்ன படியே வாங்கி கொண்டு FIRST LINE BEACHசில் இருந்த GRINDLAYS BANKல் அவரிடம் கொடுத்துவிட்டு கிரி ஸ்டேஷனரி ஷாப்பில் 2 Charcoal பென்சில் வாங்கிக்கொண்டு சித்தி வீடு செல்ல பூக்கடை போலீஸ் ஸ்டேஷன் திரும்பியதும் உள்ள பஸ் நிறுத்தத்தை நெருங்கினேன்.
சூரிய பகவான் டபுள் ஷிஃப்ட் ஒரே நேரத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். தார் சாலை உருகி இருந்ததால், எனக்கு தேவையில்லாத ஒவ்வொரு பஸ்ஸும் "ச்சபக், ச்சபக்" என்று வினோத ஒலி எழுப்பிய வண்ணம் கடந்து போயின. பஸ் நிறுத்தத்தில் நானும் அவனும் மட்டும் நின்று கொண்டிருந்தோம். என்னை விட ஒல்லியாக இருந்தான். வெள்ளை நிற ஜிப்பா, பைஜாமா.
21ம் நம்பர் பஸ் நெருங்கியது.. கம்பியை பிடித்து ஏறிய எனது கையை யாரோ இழுத்தது போல இருக்கவே, என்னையும் அறியாமல் இறங்கி விட்டேன். பஸ் நகர்ந்து விட்டது. இழுத்தவனை ஏற இறங்கப் பார்த்தேன்.
"சார் புரசைவாக்கம் போகணும், எந்த பஸ்ஸுன்னு தெரியலை" என்றான் கேள்வியுடன்.
"ஐய்யோ இது சாப்பாட்டு நேரம், கிடைச்ச ஒரு பஸ்சையும் உங்களால் விட்டு விட்டேன். ஹை கோர்ட் பக்கத்துலே போனீங்கன்னா எல்லா பஸ்ஸும் அங்கிருந்து தான் கிளம்பும். ஈஸியாக உட்கார இடம் கிடைக்கும்" என்றேன் நான்.
"சார் நான் ஊருக்கு புதுசு.. வழி தெரியாது. காட்டுவீங்களா?" என்றான்..
ஒரு நிமிடம் யோசித்தேன்.. "சரி வாங்க போகலாம் என்றவன் அவனோடு "பாய்க்கடை"யின் எதிர் ரோடில் நடக்க துவங்கினேன்"..
ஆளரவமற்ற ரோடு. உச்சி வெய்யில். தூரத்தில் ஒரே ஒரு சைக்கிள் ரிக்ஷாகாரன். ரோடை மறித்துக்கொண்டு நின்றிருந்தான் . பாதி தூரம் போனதும், கூட வந்தவன், "டேய் மரியாதையா கைல இருக்குற மோதிரத்தை கழட்டுடா" என்றான்.
"எதுக்கு? இது என் பாட்டி என் பூணூலுக்கு போட்டது. கழட்ட வராது" என்றேன்.
என் மண்டையில் அவர் திருடர் என அப்போது வரை உதயமாகவில்லை. சாதாரண டுயூப் லைட்டை விட ஸ்ஸ்ஸ்லோவான சோடியம் வேப்பர் விளக்காக இருந்திருக்கிறேன் நான்.
மோதிரம் போனால் வீட்டில் பரேடு எடுப்பார் எங்கப்பா என எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன்.. இனி ஓட வேண்டியதுதான் பாக்கி, என மண்டையில் பெல் அடிக்கும் முன்னால் பட்டன் கத்தியை ஜிப்பா பாக்கெட்டிலிருந்து மின்னல் வேகத்தில் வெளியே எடுத்தான்.
ஃபிளிக் எனும் ஓசையுடன் திறந்த கத்தி 2 மணி வெய்யிலில் என் முகத்தில் டாலடித்தது.. எனக்கு முதல் முறை உச்ச லெவெலில் இதயம் அடித்துக்கொண்டது. "இந்த மோதிரம் சுலபத்தில் கழட்ட முடியாதுங்க என்றேன்". என் மோதிர விரல் அமைப்பு அப்படி..
அவன் கூலாக "அது எனக்கு தெரியுண்டா பாடு... இப்ப நீயா கழட்டறையா? நானா வெட்டிக்கவா? என்றான். ஹா இந்த மூத்திர சந்தில் வந்து இந்த படுபாவிக் கிட்டே மாட்டிக் கிட்டேனே! என் மனம் பதைத்தது.
"நீ பஸ் ஏறும் போதே உறுவி இருக்க வேண்டியது, கழட்டுறா சோமாறி!" என்றான்.
நான் சினிமாவில் பார்த்த ஒரு ஹீரோவும் உதவிக்கு வரலை, எனக்கும் அவங்க ஹீரோத்தனம் ஏதும் உடம்பில் இல்லை.. மோதிரத்தை மெதுவாக கழட்டி கொடுத்தேன்.
"திரும்பிப் பார்க்காமல் ஓடிடு!" என்றான்.
முதலில் யார் சோமாறி? எனவும், கூடவே நான் இனிமேல் ஏன் திரும்பி பார்க்காமல் ஓட வேண்டும்? எனவும் புரியாமலும் சிறிது குழம்பினேன். பின்னர் அவன் சொன்னபடியே பஸ் ஸ்டாண்டில் வந்து நின்று கொண்டேன்.
அப்பா ஆபீசுக்கு போகவும் பயம். அடி பின்னிடுவார். வீட்டுக்கு போனால் அம்மா தர்ம அடி கொடுப்பாள்.
" கெளரவம் சிவாஜி போல, எங்க போகணும்னு தெரியலையே!!"... என மனசு ஊளையிட்டது.
3 மணிநேரம் நின்றிருப்பேன்.. எங்க ஓவியக் கல்லூரி "சந்ரு" மாஸ்டர் கடவுளை போல அங்கே வந்தார் .
" சார்" என பெருங்குரலெடுத்து அழுத வண்ணம் எல்லா கதையையும் சொன்னேன்.
"ஏய் ச்சாமி! சரியான ஏமாளியா இருக்கியேய்யா! என்றவர், பூக்கடை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப் போனார். ரைட்டரிடம், நடந்த கதையை ஒண்ணு விடாமல் சொல்லச் சொன்னார்.
அந்த ரைட்டரைப் பார்த்தாலே படு பயங்கரமாக இருந்தது. கதையை கேட்டுக் கொண்டே, 2 charcoal பென்சிலையும் கையில் வாங்கி கொண்டவர் அவற்றை வைத்து கோலாட்டம் ஆட ஆரம்பித்தார்.
எனக்கோ அந்த விலை உயந்த பென்சில்கள் இனிமேல் உபயோகமில்லாத அளவுக்கு உள்ளே நொறுங்கும் சப்தம் தெளிவாக கேட்டது.. மோதிரமும் போச்சு! இப்போ இதுவுமா? என மனசு ஓலமிட்டது.
"சார் நீங்க இவனோட டீச்சரா? என்றார் ரைட்டர்.
"ஆமாம்" என்றார் "சந்ரு" மாஸ்டர்.
" இந்த பாப்பார பசங்கள நம்ப முடியாது சார் , காலேஜ் சேர்ந்ததும் கேர்ள் பிரண்டு அது இதுன்னு அலைவானுங்க!..எவளுக்காவது மோதிரத்தை ஓதி உட்டுட்டு, நம்ம கிட்டே பொய் சொல்லுவானுங்க!" என ஒரு புது விளக்கத்தையே சொன்னார் அந்த பழுத்த அனுபவஸ்தர்!
எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போயே போச்சு!.
நடந்ததை எழுதிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியே வந்தோம்.
நான் "சந்ரு" மாஸ்டரிடம் "ரொம்ப தாங்க்ஸ் சார்" என்றேன்.. டீ வாங்கி கொடுத்தார் .
"வீட்டுக்கு ஒழுங்கா போயிடுவியாய்யா? இல்லே, நானும் வரட்டுமா? என்றார்.
"நான் போயிடுவேன் சார்" என்றேன்.. வீட்டிலே நுழைந்ததும் "சந்ரு" மாஸ்டர் கொடுத்த தைரியத்தில், பூராக் கதையும் சொல்லி, மண்டை வீங்காமல் தப்பித்தேன்.
கடைசியில் வெறும் வாயை மென்று கொண்டிருந்த என் உற்றார் உறவினருக்கு பல வருஷங்களுக்கு அவல் போட்ட திருப்தி மட்டும் மிஞ்சியது. தங்க மோதிரம் போனது போனது தான்.
படத்தில் "சந்ரு" மாஸ்டர்.

Comments
Post a Comment