1979 ஜெய் எனும் கிருஷ்ண சாமியின், சின்னச் சின்ன சு'வடு'கள். மருந்தீஸ்வரரும், மழைப் பாட்டும்.
வாசலிலிருந்து குமார் சிக்னல் கொடுத்தான். லைட்டா ஜன்னலை திறந்து "என்னடா ?" என்றேன்.
"நம்ம திருவான்மியூர் கோவில்ல ஷூட்டிங்காம், போலாமா?" என்றான் கிசு கிசு குரலில். அப்பவே ராத்திரி மணி எட்டு. எங்கப்பா இன்னும் வீட்டுக்கு வரலை.
"நைட்டு ஷூட்டிங், பெரிய ஃபயர் என்ஜின் கொண்டுவந்து இருக்காங்க! தெலுங்கு படமாம் டான்சு நிச்சயம்!" என்றான் குமார்.
அம்மா, "இன்னக்கி குமார் வீட்டுல படிச்சுட்டு கார்த்தால வரேம்மா" பதிலுக்கு காத்திராமல், கையில கிடைச்ச நாலு புஸ்தகத்துடன் எஸ்கேப்.
அவங்க வீட்டுலிருந்து, எங்க வீட்டுல படிக்கிறதா சொல்லிவிட்டு, அவன் எஸ்கேப்.
கோவில் மடப்பள்ளி ஓரமா இருக்கும் சின்ன அறைகளில் வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு சமைத்துக் கொண்டிருந்தனர். பெரிய பெரிய லைட்டுகள், ஜெனரேட்டர் வேன்கள், வெள்ளி ஜரிகை பேப்பர் ஒட்டிய பிளைவுட் போர்டுகள், தெலுங்கில் பேசிக் கொண்டு நிறைய மக்கள். ஆறு பேர் சேர்ந்து தண்டவாளம் போட்டுக் கொண்டிருந்தனர். அதன் மேலே, நாலு வீல் வச்ச பலகைமேலே காமெரா வைத்தனர்.
"மச்சி! அங்கே அம்மன் சன்னதி பக்கம் போயி பார்க்கலாம், யாரு நடிக்கராங்கன்னே தெரியலையே?" என்றான் குமாரு. இருளில் பாம்புகள் போல தரையில் கிடந்த கேபிள்களை மிதிக்காமல் தாண்டித் தாண்டி ஓடினோம். நடிகர் ஒருத்தருக்கு நெற்றியில் விபூதி வரைந்து கொண்டிருந்தனர். "யாருங்க அவரு?" எனக்கு தெரிந்த ஒரு குருக்களிடம் கேட்டேன். "யாரோ "சோமையாஜூலுவாம்". முதல் படமாம்" என்றார் குருக்கள்.
ஆளு நல்லா உயரமா, வாட்ட சாட்டமா இருந்தார். மூக்கு வாயெல்லாம் பெரிய சைசுல.
இவங்க செட்டிங் முடிக்கவே 10 மணி ஆகியிருந்தது. பாஷை மட்டும் புறிபடலை. தெரிஞ்ச சில தமிழ் வார்த்தைகளுக்கு , லு, ளு, டு, நூ போட்டு, தெரியாத பல வார்த்தைகளை வேகமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
ஆல் ரெடி, டெஸ்டிங் சார்! என்றார் ஒருவர்.. ஆல் ல்லைட்ஸ்! மைக்கில் ஒருத்தர் குரல் விட...
விளக்குகளின் ஸ்விட்ச்சுகளை ஒருத்தர் ஆன் செய்தார். திருவான்மியூர் கோவில் மகா அழகாகத் தெரிந்தது.
கொஞ்சத்தில் ஷூட்டிங் ஆரம்பிக்கும் என்று தோன்றவில்லை.
குமாரு வீட்டுக்கு போலாமாடா? என்றதும், "இருடா..என்னா தான் நடக்குதுன்னு பார்க்கலாம்" என்றான். அனைவருக்கும் ஜமக்காளம் விரித்து இரவு உணவு வழங்கப்பட்டது. எங்களுக்கு அதைப் பார்த்ததும் பசியெடுக்க ஆரம்பித்தது.
ஒருத்தர் "நாக்ரா" ஆன்! என கத்தினார். டேப் ரெகார்ட் சுழன்றதும்,
சங்கரா! நாத சரீரா பரா! வேத விஷாலா ஹரா! ஜீவேஷ்வரா! என்று எஸ் பீ பி பாடினார். கேட்க சூப்பராக இருந்தது. வெள்ளை சட்டை பேண்ட் போட்ட டைரக்டர், செட்டுப் போட்ட சிவலிங்கத்தின் முன்னால் ஆனந்தமாக நடனமாட சொல்லிக் கொடுத்தார். அமைதியாக ஆரம்பித்த பாட்டு கொஞ்ச நேரத்தில் உக்கிர கதிக்கு மாறியது..
ரெயின் டெஸ்ட் என்று டைரக்டர் சொன்னதும், ஃபயர் எங்ஜினிலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்தது. நல்லா ஸ்பிரட் பண்ணி அடிங்கோய்யா என்றார் டைரக்டர்.
குலு குலு, ஜிலு ஜிலு, பிலு பிலு என ரைமிங்காக பாட்டு தொடர்ந்தது..வேறு வேறு கோணங்களில் அந்த நடிகரை, மழையில் கை அசைக்க விட்டு, சுட்டு தள்ளினர்.
கொஞ்சமாக தூக்கம் வர ஆரம்பித்தது. "மச்சி போகலாமாடா?" என்றேன்.
"போலாண்டா... ஏதோ மழைப் பாட்டுன்னா கலர் கலரா கும்பலா ஆடுவாங்கன்னு பார்த்தால் ...ஒரு தாத்தாவை ஆடவிட்டு படுத்தியெடுக்கராங்க!" என்றான். திட்டி வாசல் வழியே,
கோவிலை விட்டு வெளியே வந்தோம்.
உள்ளே அடா புடா எனும் தொனியில் அந்த தாத்தா, சங்கரனிடம் அதி வேகமாக நீதி கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது எனக்கு அதன் காரணம் தெரியவில்லை. நாங்கள் எங்கள் கோவிலின் கட்டி முடிக்காத எலும்புக்கூடு மண்டபத்தில், புஸ்தகங்களை தலைக்கு வைத்துக்கொண்டு தூங்க ஆரம்பித்தோம்.

Comments
Post a Comment