1974- ஜெய் எனும் கிருஷ்ணசாமியின் சின்னச் சின்ன சு"வடு"கள். "சண்முக சுந்தரத்தின் சீவாளியும், சண்முகத்தின் பேனா நிப்பும்".


ஆறாம் கிளாஸ். முதல் முதல் சண்முகம் அறிமுகமானான். அவனும், அவன் அண்ணன் செல்லையாவும், சென்னை ஐஐடி வைத்திருந்த மெர்சிடிஸ் பென்ஸ் பஸ்ஸில் பயணப் பட்டு, அடையாறு தியசோபிகல் சொசைட்டி வாசலில் வந்து இறங்குவர். அங்கிருந்து பள்ளிக்கூடம் பக்கம் தான்.
ஒரு மகா அறிவாளி பேராசிரியரின் மகன்கள். அவரின் அறிவு இவங்களின் மீது சொட்டும்.
வகுப்பில் முதலில் வருவதன் சாத்தியக் கூறுகள் எனது ஐந்தாம் வகுப்பிலிருந்து குறைய துவங்கி இருந்தன.
நல்ல கையெழுத்துக்கு ராஜம் டீச்சர், நட்சத்திரம் வரைந்து குட், வெரி குட் போடுவார்கள். அதுவரை பென்சில் பிடித்து பழகிய எனக்கு இந்த பேனாக்களை பிடித்து எழுதும் போது மிகவும் வலித்தது. ஆனால் நட்சத்திரமும், வெரி குட் எனும் சிவப்பு மைக் குறியும் மட்டும் கொஞ்சத்தில் கிடைக்க மாட்டேன் என்றன.
பொறாமை எனும் அழுக்காறு எனக்குள் குடியேற துவங்கியது.
சண்முகத்தின் நோட்டுப் புஸ்தகம் எங்கள் கிளாசின் பெஞ்ச் மார்க் ஆகி விட்டிருந்தது.
ஆடி மாசம் வீட்டு பக்கத்தில் இருந்த பஜனை மடத்தின் ஒலிபெருக்கியில் ஜில்ஜில் ரமாமணி, "சிக்கலாரே, நீங்க நாயனத்துல ஏதோ ' விசை ' வச்சு ஊதுறீங்கன்னு பேசிக்கிராக" என்று சண்முக சுந்தரத்தை சிலாகித்து சொல்லிக் கொண்டிருந்தார்.
நான் மும்முரமாக என் பேனாவின் நாக்கையும் நிப்பையும் பல்லால் கடித்து, முறுக்கி இழுத்துக் கொண்டிருந்தேன். இழுப்பது வரம்பு மீறியதால், பேனா கையிலிருந்து உருவிக் கொள்ள, நோட்டு, புஸ்தகங்கள் எல்லாவற்றிலும், நீல மைக் கொட்டி, அந்த இடமே களேபரமானது.
வெறும் அர்ச்சனையில் துவங்கிய என் அம்மா, அடித்த தன் கை வலி தாங்காமல், சமயலறையின் மத்தை கொண்டு வந்திருந்தாள். அடீன்னா அடி, முதுகு பிஞ்சு போச்சு.
"சனியன், எனக்குன்னு வந்து வாச்சிருக்கு பாரு! எப்பப்பாரு எதையாவது நோண்டிண்டே இருக்க வேண்டியது..பீடை.. வீட்டை விட்டு வெளியே போ.. பெத்த வயத்துக்கு பிரண்டையத்தான் வச்சு கட்டிக்கணும்" என்று திட்டிக் கொண்டே அடுக்களைகுள் போனாள்.
அழுது கொண்டே எல்லா இடத்தையும் ஈரத் துணியால் துடைத்து விட்டு, நோட்டு புஸ்தகத்தில் பாழாகப் போயிருந்த மூணு பக்கத்தையும் கிழித்தேன். கூடவே நல்ல பேப்பர் மூணு பின்னாலிருந்து வெளியே வந்தன. கண்ணெல்லாம் குளமாகி கீழே சொட்டிக் கொண்டிருந்தது.
சண்முகத்தின் மேலும் அவன் பேனாவின் மேலும் ஒரு இனம் புரியாத கோபம்.
"நாயனத்துல என்ன இருக்கு ஜில்லு? நாபிக் கமலத்துலெருந்து நாம எடுக்குற மூச்சுலயும், பகவானின் அநுகிரகத்திலும் எல்லாம் இருக்கு! என சிக்கல் சண்முக சுந்தரம் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
வீட்டை விட்டு வெளியேறி, திருவான்மியூர் கோவிலின் எலும்புக் கூடு மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். நெடு நாளைக்கு கட்டி முடிக்க முடியாத மொட்டை கோபுரமாகவே இருந்தது. எனக்கும் என் தோஸ்து குமாருக்கும் வீட்ல அடிவிழுந்தால் போக்கிடம், எலும்புக்கூடு மண்டபம் தான்.
நேரம் போய்க் கொண்டே இருந்தது. நாளைக்கு ஹோம்வர்க்கு நோட்டை காட்டணும்.
மண்டையெல்லம் ஒரே குழப்பம்..ஜெயிக்கணும் ஒருவாட்டியாவது...என்னும் எண்ணம்...துரத்தியடித்தது. வீட்டுக்கு திரும்பினேன். உள்ளே நுழையவில்லை.
ஒரே விடை, பக்கத்து வீட்டு நாயகம் மாமாதான். அவர் வீட்டு கதவைத் தட்டினேன். "மாமா, ஒரு ஹெல்ப் வேணும்".
அழுது வீங்கியிருந்த மூஞ்சியைப் பார்த்தார். இன்னமும் கொஞ்ச நஞ்ச கேவல் பாக்கி யிருந்தது.
"என்ன வேணும்?" என்றார். அவர் TTTI எனும் மத்திய அரசின் ஸ்தாபனத்தின் ஒரு என்ஜினியர்.
வெறும் ஒத்தைகல்லு சுவற்றுக்கு மறு புறம் அவர் வீடு. எங்க வீட்டில் நடக்கும் ஒவ்வொரு கலாட்டாவும் அவருக்கு நிச்சயம் கேட்டிருக்கும்.
"சண்முகத்தோட பேனா நல்ல பட்டையா அழகாக எழுதுது, என் பேனா எவ்வளவோ அழுத்தினாலும் மெல்லிசா எழுதுது. இல்லைன்னா நிப்பு விரிஞ்சு பேனா கெட்டுப் போயிடுது. ஒரு தடவை கூட என் டீச்சர் goodம், போட மாட்டேங்குறா, ஸ்டாரும் போடமாட்டேங்குறா. என்ன செய்யணும்ன்னே தெரியலை" என்றேன்.
அவர் நிதானமாக என்னைப் பார்த்தார்..
"போய் உன் பேனாவை கொண்டு வா என்றார்.
சரி என்றேன்.
கதவின் இடையில் இருக்கும் சந்து வழியாக விரலை விட்டு தாழ்ப்பாள் நீக்கி உள்ளே நுழைந்தேன். என் அலுமினியப் பொட்டியை எடுத்துக் கொண்டு பக்கத்து வீட்டை அடைந்தேன்.
உள்ளே இருந்த ஏகப்பட்ட பேனா நிப்புகளையும் , பேனாக்களையும் பார்த்து நாயகம் மாமா அதிர்ந்தார்.
ஒரு ஸ்கூல் போகும் பையன் 2-3 பேனா வச்சிருப்பான். பொட்டி மொத்தமும் வச்சிருக்கமாட்டான்.
அவர், "அதை அப்படியே ஒரு ஓரமா வை" என்றார்.
அவர் வீட்டில் உள்ள டிராயிங் போர்டில், பென்சிலால் அடுத்தடுத்து நாலு கோடுகள் வரைந்தார். அதில் இங்கிலீஷின் 26 எழுத்தையும் பிரித்தும் சேர்த்தும் எழுதி, h,l,t போன்றவை மேல் கோட்டையும், g,j,q,y,z கீழ் கோட்டையும், தொடுவது போல எழுதிக் காட்டினார்.
"எலே, விளங்குச்சாலே?" என்றார்.
T ஸ்கொயர் வச்சு இன்னும் நாலு கோடு போட்டு "இப்ப நீ எழுதுலே" என்றார்.
எழுதினேன்.
அட, எனக்கும் வருதே!
என் கண்கள் விரிந்தன..
மாமாவை நன்றியுடன் பார்த்தேன். "ரொம்ப தேங்க்ஸ் மாமா!" என்றேன்.
மாமா என் கன்னத்தை வருடி, "உன் பேனாவை எடுலே" என்றார். கொடுத்தேன். ஒரு துணியால் லாவகமாக நிப்பையும், நாக்கையும் கழட்டினார். ஒரு பிளேடால் நாக்கின் வரிகளை ஆழமாக்கினார். மறுபடியும் பொருத்தி, டிவைடரை வைத்து நிப்பின் வட்டத்தில் ஒரு அழுத்தம், நிச்சயம் ஒரு ஆழமான புள்ளி விழுந்திருக்கும்.
"இப்பம் எழுதுலே என்றார்".
என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை...என் கையெழுத்து மாறியிருந்தது. என் பேனாதானா?
சந்தோஷம் பிய்த்துக் கொண்டு வந்தது.
ஒரு வழியாக ஸ்டாரும், goodம்
வாங்கிடுவோம் என்ற நம்பிக்கை பிறந்தது.
Thanks நாயகம் மாமா!
சிக்கல் சண்முகசுந்தரம் திருவாரூரில், விசையேதும் வைக்காமல் தில்லானா வாசித்துக் கொண்டிருந்தார்.
நாகர்கோவில் நாயகம் மாமா எனக்குள் விசை வைத்து அனுப்பியிருந்தார்.

Comments