ஜெய் எனும் கிருஷ்ணசாமியின் சின்னச் சின்ன அடிச்சுவடுகள். 1974.. வயது 5. "மூடாத குழியும், முழுசாப் பிறக்காத நாய்குட்டியும்"
திருவான்மியூர் மார்கெட்டில் மரவெள்ளிக்கிழங்கை வேகவைத்து விற்று கேசவனை வளர்த்து வந்தாள் அவன் அம்மா.
உரைகிணறு இறக்கும் போது அவன் அப்பா மேலே மண் சரிந்ததில், அவர் அப்போது இல்லை.
அப்பாவின் சைக்கிளை கேசவன் ஓட்ட கற்றிருந்தான். எனக்கும் ஓட்ட ஆசைதான். அவனிடம் கற்றுக்கொடுக்க சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தேன்.
சைக்கிளின் முக்கோண சந்தினில் காலை விட்டு முக்காப் பெடல் அடிக்க சொல்லிக் கொடுத்தான்.
நானும் தட்டித் தட்டி, தடுமாறி கீழே விழாமல் ஓட்ட கற்றுக் கொண்டிருந்தேன். சீட்டைப் பிடித்துக் கொண்டு கூட ஓடி வருவான். அவனைபோல சீட் மேலே ஏறி ஓட்டும் அளவுக்கு அப்போது எனக்குத் துப்பில்லை.
வழக்கமாக ஓட்டும் வால்மீகி நகர் , சீவார்டு ரோடுகளை விடுத்து கொட்டிவாக்கம் குப்பம் ரோட்டில் ஓட்டும் போது, அரசாங்கம் மின்சாரக் கேபிள் இணைப்புக்கு புதிதாக குழி வெட்டியிருந்ததும், அது மூடப் படாமல் இருந்ததும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
பள்ளம் வந்தால், ப்ரேக் ரெண்டையும் அழுத்த சொல்லிக் கொடுத்த கேசவன், அது ரெண்டும் பிடிக்காது என்று சொல்ல மறந்து விட்டான்.
ஆறடி ஆழத்தில் நீளமாக வெட்டியிருந்த பள்ளத்தில் தலைகுப்புற "ஐய்யோ" என்றபடி நானும் சைக்கிளும்
வேகமாக விழும்போது கவனித்தேன்... நீளமான குழியின் மறுமுனையில், வயிற்றில் குட்டிகளுடன், எப்போது வேண்டுமானாலும் போட ரெடியாக இருந்த நாயை.
நான் விழுந்த சொற்ப இடத்துக்கும், அந்த நாய்க்கும் குறைந்தது ஐந்தடி தூரம் இருந்தது, எனக்கும், அதற்கும் மட்டுமே தெரியும். திடீரென்று நான் பள்ளத்தில் விழுந்த அதிர்ச்சியில், பதறிப் போன அது, என் மூதாதையர் அனைவரையும் அதன் பாஷையில் திட்டியபடி எழுந்து ஓட முடியாமல் ஓடியது. எல்லாமே சில நொடிகளுக்குள் நடந்து விட்டன.
கேசவனும், கோபியுமாக சேர்ந்து என்னையும் சைக்கிளையும் பள்ளதிலிருந்து மீட்டனர். உடம்பெல்லாம் சவுட்டு மண். கேவலமாக வெளியே இழுக்க பட்டேன். சைக்கிளின் கதி என்னைவிட மோசமாக இருந்தது.
எங்கப்பவுக்குத் தெரிந்தால் நன்றாக தூசு தட்டுவார்..அவர் வரும் முன்னால் சுத்தமாக வேண்டுமே எனும் கவலையும், தொற்றிக் கொண்டது.
தீனமான குரலில் கத்திக் கொண்திருந்த அந்த நாய், நாலு குட்டியைப் போட்டிருந்தது. ஆனால், ஒன்றுக்கு மட்டும் உயிரில்லை.
அந்தக் குட்டியை கோபியும், கேசவனும் பள்ளம் தோண்டிப் புதைத்தனர். மண்ணை குமித்து, அதன் மேலே ஒரு ஆமணக்கு செடியை முறித்து நட்டனர். அவர்களிருவரும், நான் அதன் மேல் விழவேதான், அது செத்துப் பிறந்ததாக சத்தியமே செய்தனர்.
"ஐயரே, தெனிக்கும் இந்த செடிக்கு தண்ணி ஊத்தணும் என்றான்" கோபி. "இல்லைன்னா அடுத்த ஜென்மத்துல நீ நாயாப் பொறப்பே, அது உன்மேல சைக்கிள் ஏத்தும்" என்று மனுநீதி சோழன் போல நீதி சொன்னான் கேசவன். எனக்குள் பிதறல் தொத்திக் கொண்டது..
நான் சீட்டுமேல் ஏறி சைக்கிள் ஓட்டுவதற்குள், ஆமணக்கு செடி என் பராமரிப்பில் நன்றாக வளர்ந்திருந்தது. உயிருடனிருந்த மிச்ச நாய்குட்டிகளும் அவ்வப்போது எனக்கு சகாயம் செய்தனர். சித்தப்பாவின் உபயதில் நானே புதிய சைக்கிள் வைத்திருந்தேன். அந்த குழியை அரசாங்கம் மூட மட்டும், நெடுங்காலம் பிடித்தது.
Comments
Post a Comment