1969. ஜெய் எனும் கிருஷ்ணசாமியின், சின்னச் சின்ன சு'வடு'க்கள். காவல் காரன்
வயது நாலு. கோடை விடுமுறைக்கு ஆரணி, பாரதியார் தெரு, NKV தாத்தா வீட்டுக்கு வந்திருந்தோம்.
ஊரெல்லாம் பட்டன் வச்ச மர்பி ரேடியோ வைத்திருந்தாலும், நியூஸ் கேட்கவும், அவ்வப்போது பாட்டு கேட்கவும் என் தாத்தா பெரிய டயல் வைத்த டிரான்சிஸ்டர் வைத்திருந்தார். அவரது வக்கீல் வருமானத்தில் அது போதும் என் முடிவு செய்திருப்பார் போலும்.
தாத்தா வாயில் வேப்பங்குச்சியுடன், முதல் நாள் அங்கவஸ்திரத்தை ஒரு முண்டாசு கட்டிக்கொண்டு, ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருப்பார்.
திரைகானம், எல்லா திரைப் பட பாடல்களும் கலந்து கட்டி வரும்.
எங்கள் வீட்டில் ஏகப்பட்ட மக்கள். அவரவர் விருப்ப ஹீரோ, ஹீரோயின் பாட்டு வரும்போது, பெட்டியருகே வந்து அபிநயம் பிடித்துவிட்டு காணாமல் போவர்.
தாத்தா சந்தியாவந்தனம் முடித்து, தன் ஆஃபீஸ் ரூமில் போய் தனது மஹா நாற்காலியில் ராஜாவைப் போல ஆரோகணிப்பார்.
பாட்டி "டிங் டிங்" என்று மெட்டி யொலியுடன் ஒரு தபரா செட்டில் காபி கொண்டு போவாள். கோபால் பல்பொடியுடன் பல்லை தேய்த்து தொட்டி முற்றத்தில் நானும் என் தம்பியும் துப்பித் தீர்த்த பின், எங்களுக்கு பால் வழங்கப் படும்.
காந்தா மாமா வாசலில், பள்ளிக் குழந்தைகளுக்கு பேனாவில் இன்க் போட்டு கொடுத்துவிட்டு அவர்கள் கொடுக்கும் 2பைசாக்களை ஞாயிற்றுக்கிழமை வரிசையாய் வரும் பிச்சைக்காரர்களுக்காக சேர்த்து வைப்பார்.
ஒரு நாள் திண்ணையில் தூண் பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன்,
ஒருமாட்டுவண்டியில் மைக் செட்டு பொருத்தி , கார்த்திகேயன் தேட்டரில் வந்திருந்த காவல் காரன் பட விளம்பர துண்டு பேப்பர்களை வாரி இறைத்துக் கொண்டு போயினர்.
"மெல்ப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ..வண்டியிலிருந்து சத்தமாக கூம்பு ஸ்பீக்கரில் பாட்டு ஒலித்தது.
அந்தப் பாட்டு என் மண்டையில் நன்றாக ஏறிக்கொண்டது.
சாயந்திரம் தனபால் மாமா, மரண வேகத்தில் கூட்டுறவு பால் பண்ணையின் பாலுடன் கண கண என மணியோசையோடு வந்து , பால் ஊத்திவிட்டு, சைக்கிளுடன் மாயமானார்.
பாட்டி சுடுபால் தர இன்னும் நாழியாகும், மறுபடியும் திண்ணையில், வெட்டியாக உட்கார்ந்திருந்தேன்...
"மெல்ப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ.. உரத்தக் குரலில் பாடிக் கொண்டிருந்தேன்.
அந்தப் பெண் சடாலென்றுத் திரும்பிப் பார்த்தாள்.
விடு விடுஎன அருகில் வந்தவள்
என் காதைப் பிடித்து திருகி வீட்டுக்குள் இழுத்துப் போனாள்.
"வக்கீல் சார், உன் பேரனா இவன்?" என்றாள்.
"என்ன செஞ்சான்? என்றார் NKV தாத்தா.
"என்னைப் பார்த்து, மெல்ப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ.. அப்படின்னு பாட்டுப் பாடரான்... முளைச்சு மூணு இலை விடலை".
தீர்ப்புக்காக அவர் முகத்தை பார்தவளுக்கு,
கோபமாக தாத்தா என்னை பார்த்து "இவங்களைப் பார்த்து பாடினியான்னு?" கேட்டார்.
தாத்தா "நான் பாடினேன் இவங்க குறுக்கே போய்ட்டாங்க.. திரும்பி வந்து உன்கிட்டேயிழுத்து வந்துட்டாங்க"
"உன்னைப் பார்த்து பாடினது தப்பு தான் அம்மா.. அவனை நான் கண்டிக்கிறேன்" என்றவர்
"ஏண்டா! இவங்களைப் பார்த்து இனிமேல் மெல்லிடையாளேன்னு பாடுவியா?" என்றார்.
"பாடமாட்டென் என்றேன் அப்பாவியாக"..
தாத்தா வார்த்தையில் பொடிவைத்து பேசியது எனக்குப் புரியவில்லை, அந்த அம்மாளுக்குப் புரிந்தது.
தலையில் அடித்துக் கொண்டே "தாத்தாவுக்கு ஏத்த பேரன்" என்றபடியே வெளியேறினாள்..
தாத்தா எனும் காவல்காரன், என்னை வாரி அணைத்துக் கொண்டார்.
Comments
Post a Comment