1969- ஜெய் எனும் கிருஷ்ணசாமியின் சின்னச் சின்ன சு"வடு"கள். "மாயா பஜாரும், ஸ்பெஷல் இபெக்ட்டும்"




எனக்கு வயசு 5.

ஆரணி லட்சுமி தியெட்டரில் பழைய மாயா பஜார் கூட்டிபோனார்கள். கண்டசாலா குரலில் ஜெமினிகணேசன் பாடிக் கொண்டிருந்தார். எதிரே அந்த கால ஸ்கைப் சாட் பெட்டியை திறந்து வைத்துக்கொண்டு லீலா குரலில் சாவித்ரி மிச்ச பாட்டை பாடினார்.

ச்சட்டுன்னு படம் நின்று விட்டது. ஆனாலும் "ச்சிர்ர்ர்" என ஒரு சத்தம் மட்டும் பின்னாலிருந்த ரூமிலிருந்து வந்தது. ஓய்ந்து போன மஞ்சள் லைட் எரிய ஆரம்பித்தது. ஓரத்திலிருந்து ஒருவன் ஒரு சின்ன மரப் பெட்டியை தலைக்கு மேலே தூக்கிய வண்ணம், "பட்ருபிஸ்ஸ்கேய்ய்ய்ய்ட்" எனக் கூவியபடி வியாபாரம் துவங்கினான். இன்னொருத்தனோ ஒரு சின்ன சோடா ஒபெனரைக் கொண்டு, ஆறு புட்டிகள் அடங்கிய பெட்டியை வைத்துக்கொண்டு "ட்றிங், ட்றிங்" என "ஸ்ஸோடாகெலேர்" வித்துக் கொண்டிருந்தான். "டிஸ்க்க், டிஸ்ஸ்க்" என புட்டிய திறக்கும் சத்தம் வேறு.
"ம்மா எனக்கு ஒரு சோடா வேணும்மா!" "இருடா! ரீலை சுத்தினதும் படம் போட்டுடுவான், அப்புறம் பெரிய இண்டர்வெல்லுல வாங்கித்தறேன்" என்றாள் என் அம்மா.
"பலே பலே பலே தேவா"... பாட்டு முடிஞ்சதும், பூதங்கள் அட்டகாசம் ஆரம்பித்தது. மெய்மறந்து பார்க்கத் தொடங்கிவிட்டேன். கடோத்கஜனைப் பார்த்ததும் உதறல் துவங்கியது. "நமோ மாதா, நமோன் நமஹ" என்று வானில் தனது கதையுடன் பறந்து, குஜராத் ஓரத்தில் போய் துவாரகையில் இறங்கினார். ஊரெல்லம் அவர் கால் விரல் உயரம் கூட இல்லை. வத்சலாவை இடம் மாற்றி விட்டு, லக்னகுமாரனை கல்யாணம் செய்து கொள்ள மறுபடியும் வானில் மரைந்தார்.
"தங்கமே உன் போல" பாடிய லக்னகுமாரன், பொய் சாவித்ரி கையைக் காட்டியதும், தாளம் போடும் கைகள் ஒட்டிக் கொள்ள, பிரிப்பதற்கு ததிங்கிணத் தோம் போட்டார். எல்லோரும் சிரித்தனர், விசில் வேறு.
மஹாப் பசியுடன் "கல்யாண சமையல் சாதம்" பாடிய கடோத்கஜன், ஒரு கையை அசைத்ததும் எல்லாப் பாத்திரங்களும் வரிசையில் வந்தன. வாயைத் திறந்ததும், தின் பண்டமெல்லாம் ஒவ்வொன்றாக உள்ளேயும் போயின. தந்திரக் காட்சிகள் என்னை அதிசயப் படுத்தின. எனக்கு பேராச்சரியம்..
நாளைக்கு என் தாத்தா "பேரா! நீ என்னவாகப் போறெ?" விளையாட்டு விளையாடினால் இந்த கடோத்கஜனாகப் போறென்னுதான் சொல்லணும்னு மனசுக்குள் நினைத்துக்கொண்டேன்.
ஓரு வேஷ்டி துணியை குறுக்கில் கட்டி மாப்பிள்ளை பெண்ணைப் பார்க்கும் சீன். என் கையில் சோடாக் கலர். சட்டென துணி விலக ஒரு பெரிய புலி முகம் மொத்த ஸ்கிரீனையும் நிறைத்தபடி, பெரிய உறுமல் சத்தமும்!
அய்யோ புலி என பின்னால் சாய்ந்தவன்தான். தடுப்பு எதுவுமில்லாத சிமெண்டு பெஞ்சு, பின்மண்டையில் செம்ம அடி. மூஞ்சி மொத்தமும் ஸ்சோடாக்கலர் கொட்டியது. ஒரே அழுகை.
"வாய மூடு! இல்லென்னா கடோத்கஜன் மறுபடியும் வருவான்" என்றாள் என் அம்மா. அவள் சொன்னபடி மறுபடியும் வந்தான்! இப்போது சிங்கவால் குரங்கு போல, கொஞ்சமாக தெளிந்திருந்தேன்.
கடைசியில் பறக்கும் கம்பளம் வந்து எல்லோரையும் வாரி சுருட்டிகொண்டு போனது. அந்த மாயா பஜார் படம் மட்டும் என் மனதின் ஓரத்தில் நிரந்தரமாக குடி கொண்டது.
1997. AVM studio. திருவிளையாடல் புராணம் செட். "கிருஷ்ணசாமி, இந்த எபிசோடுல ஒரு குண்டோதரன் வாயை திறந்ததும் சாப்பாடு எல்லாம் உள்ளே போகணும் .. நீங்க எப்படி ஸ்பெஷல் இபெக்ட் ப்ளான் பண்ணியிருக்கீங்க? என்று பாண்ட்ஸ் பாலா வெற்றிலைப் பாக்கை வாயில் குதப்பியபடி கேட்டுக் கொண்டிருந்தார். நான் தீவிரமாக அதற்கு கதைப் படம் (story board) வரைந்து கொண்டிருந்தேன்.. மனசு மொத்தமும் அந்த கடோத்கஜன் S.V.ரங்காராவ் தான் நிறைந்திருந்தார்.

Comments